×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடல் உள்வாங்கியதால் தரை தட்டிய படகுகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலோரக் கிராமமான திருப்பாலைக்குடியில் கடல் திடீரென உள்வாங்கியதால், மீன்பிடி படகுகள் தரை தட்டி நின்றன. இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள கடலோர கிராமமான திருப்பாலைக்குடியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமமே மீன்பிடி தொழிலை நம்பி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வழக்கத்துக்கு மாறாக கடல் நீர் உள்வாங்கியதால், படகுகள் அனைத்தும் தரை தட்டி நின்று விட்டன.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இயலவில்லை. சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, இயல்பு நிலைக்கு கடல் திரும்பியது. இதனால் மீனவர்கள் மீன் பிடித்தொழிலுக்கு சரியான நேரத்திற்கு செல்லமுடிய வில்லை. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘கடல் இயற்கையாகவே அவ்வப்போது உள்வாங்குவது சகஜம்தான். ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு படகுகள் தரை தட்டி நின்றதால், மீன்பிடித் தொழிலுக்கு செல்வது தாமதமாகி விட்டது. பின்னர் சகஜ நிலை ஏற்பட்ட பிறகுதான் தொழிலுக்கு சென்றோம்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,RS Mangal , r.s.smankalam, sea, boats
× RELATED வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்