×

தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக 3,000 அறிவியல் ஆய்வகங்கள்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்

ஈரோடு: மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி திறன் வளர்க்க தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக 3 ஆயிரம் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும் என ஈரோட்டில்   மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஈரோடு கலை  மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோவின் முன்னாள்  திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில துணைத்தலைவருமான மயில்சாமி  அண்ணாதுரை பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கையடக்க செல்போன் மூலமாக பல்வேறு தொழில் நுட்பங்களை எளிதாக கையாண்டு  வருகிறோம். வருங்காலத்தில் அறிவியலின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும். பாடப்புத்தகத்தை கடந்து மாணவர்கள் ஆராய்ச்சிகளில் இறங்கி அறிவியலை  கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டுத்துறையில் பயிற்சி தேவைப்படுவதைபோல அறிவியலுக்கும் செய்முறை  பயிற்சி அவசியம். கற்றல் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுபடும். மாணவர்கள் புதிதாக கற்பிக்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். கடந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சியின் உச்சம் என்பது ராக்கெட் விடுவதாக இருந்தது. இன்றைய காலத்தில் மாணவர்களே ராக்கெட்டை செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சிக்கு அரசு மட்டுமே  முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. தனியார் துறையும் சேர்ந்து ஈடுபடும் போது மக்களின் தேவை பூர்த்தியாகும். அறிவியல் மன்றம் மூலமாக மாணவர்களின் திறனை கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  தொழில் ரீதியாகவோ, வர்த்தக ரீதியாகவோ மாணவர்களின் திறமை வெளிகொண்டு வரப்படும். அதற்கு உதவியாக பள்ளிகளில் ஏற்கனவே உள்ள அறிவியல் கூடங்களை தவிர புதிய ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இதற்காக தமிழகத்தில் மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி திறன் வளர்க்க  அரசு பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரம் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Science Labs ,Tamilnadu Government Schools , Tamilnadu Government School, Science Labs, Mayilasamy Annadurai
× RELATED பாடங்களுக்கு வழங்குவதைபோல மாணவர்...