×

பிரதமர் ஆவதற்கான தகுதிகள் ராகுல் காந்தியிடம் உள்ளன: தேஜஸ்வி யாதவ் பேட்டி

புதுடெல்லி: ‘‘நல்ல பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் உள்ளன. ஆனால் யார் பிரதமர் என்பதை மக்களவை தேர்தலுக்குப்பின் மெகா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்வர்’’ என  ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுலின் கவுரவத்தை கெடுக்க பா.ஜ  ஆயிரக்கணக்கான கோடி செலவில் எதிர்மறையான பிரசாரம் மேற்கொள்கிறது. ஆனால் அவரது அன்பு, பெருந்தன்மை ஆகியவற்றால் மக்கள் மனதை கவர்ந்துள்ளார். அதனால்தான் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சட்டீஸ்கர்,  மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் காந்தியின் தலைமை காங்கிரஸ் கட்சியிலும், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காத 69 சதவீத வாக்காளர் மனதிலும்  நம்பிக்கையையும், ஊக்கத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

நல்ல பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுல் காந்தியிடம் உள்ளன. அவர் பழமையான கட்சியின் தேசியத் தலைவர். கடந்த 15 ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ளார். அவரது கட்சி 5 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது  என்பதை மறந்துவிடக் கூடாது. அவரது தலைமை பண்பு மீது எந்த கேள்வியும் கேட்கக் கூடாது. இந்தியா ஜனநாயக நாடு. அதில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வர். பிரதிநிதிகள் தங்கள் தலைவரை தேர்வு செய்வர்.  அவர்கள் பிரதமராகிறார்கள். ஜனநாயகம் எப்போதும் மக்களை மையமாக கொண்டது. குறிப்பிட்ட நபரை சார்ந்து அல்ல. சர்வாதிகார அரசை நாங்கள் விரும்பவில்லை. பா.ஜ கட்சியில் தனி நபர் ஆதிக்கம் இருக்கிறது. இதுபோன்ற  கலாசாரத்தை நாங்கள் விரும்பவில்லை.

தேர்தலுக்குப்பின் நாங்கள் கலந்தாலோசித்து தலைவரை தேர்ந்தெடுப்போம். அதற்கு அவசரம் இல்லை. கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் மன்மோகன் சிங் பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதை மறக்க வேண்டாம். சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை மூலம் என் மீது பொய் வழக்குகளை பா.ஜ அரசு போடுகிறது. அதற்கெல்லாம் நாங்கள் பயப்படவில்லை. பா.ஜ மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை உறுதி செய்ய, நான்  எந்த அளவுக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,interview ,Tejasvi Yadav , Prime Minister, Rahul Gandhi, Tejasvi Yadav
× RELATED சொல்லிட்டாங்க…