×

வங்கி அதிகாரிகள் மீது எப்ஐஆர் சிபிஐ மீது ப.சிதம்பரம் தாக்கு

புதுடெல்லி: வீடியோகான் குழுமத்துக்கு வழங்கப்பட்ட ரூ.3,250 கோடி கடன் தொடர்பாக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் தொழிலதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது  சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் கே.வி.காமத்தை விசாரிக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பற்றி அமெரிக்காவில் சிகிச்சை பெறும்  மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பேஸ்புக்கில் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘துணிகர விசாரணைக்கும், முறையான விசாரணைக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. துணிகர விசாரணை மீடியாக்களுக்கு தகவலை  கசியவிட்டு, நன்மதிப்பை கெடுக்கும், கண்டனத்தை வரவழைக்கும். ஆனால் தண்டனை பெற்றுத்தர முடியாது. முறையான விசாரணை உண்மையான குற்றவாளிகளை ஆதாரங்களின் அடிப்படையில் குறிவைக்கும். துணிகரமும்,  தன்னை பெரியவன் என தவறாக எண்ணிக் கொள்ளும் மனநிலையும், விசாரணை அதிகாரிகளிடம் இருப்பதால், அவர்களால் பல வழக்குகளில் தண்டனை பெற்றுத்தர முடிவதில்லை’’ என கூறியிருந்தார்.

வங்கிக் கடன் மோசடி வழக்கில் முக்கிய நபர்கள் மீது கவனம் செலுத்தாமல் வங்கி உயர் அதிகாரிகளை சிபிஐ குறிவைப்பதைத்தான் அருண் ஜெட்லி இவ்வாறு விமர்சித்திருந்தார். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள  முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ‘‘விடுமுறையில் இருக்கும் நிதியமைச்சரிடம் இருந்து சரியான சான்றிதழை சிபிஐ பெற்றுள்ளது. ‘துணிகரமும், தன்னை பெரியவன் என தவறாக எண்ணிக் கொள்ளும் மனநிலையும்  விசாரணை அதிகாரிகளை தோற்கடித்து விடுகிறது. பிரபல வங்கி உயர் அதிகாரிகளை பகுத்தறியாமல் குறிவைப்பதற்கு, ஜெட்லியின் மனசாட்சியும், சட்ட புத்தியும் இறுதியில் கண்டனம் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி. சிறு  அளவிலான பண குற்றச்சாட்டுக்களுக்காக சிறந்த ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட பலரை சிபிஐ குறிவைக்கும்போது, அரசு தூக்கத்தில் உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : P. Chidambaram ,CBI ,FBI , Bank officers, FIR, CPI, P. Chidambaram, assault
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...