மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆதிதிராவிட நலத்துறையின் 22 விடுதிகளில் சிசிடிவி கேமரா: மார்ச்சுக்குள் முடிக்க பொதுப்பணித்துறை உத்தரவு

சென்னை: மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. இப்பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறை கட்டுப்பாட்டில் 11 கல்லூரி விடுதிகள், 2 பள்ளி விடுதிகள், 3 ஐடிஐ விடுதிகள் என மொத்தம் 22 மாணவ, மாணவிகள் விடுதிகள் உள்ளன. இதில், 10 பெண்கள்  விடுதிகளும் அடக்கம். இந்த விடுதிகளில்  2459 மாணவ, மாணவிகள் தங்கி உள்ளனர்.இதில், பெரும்பாலானோர் கிராமங்களை சேர்ந்தவர்கள். இந்த விடுதிகள் பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.50 லட்சம் வரை நிதி  ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், அந்த நிதியை பெரும்பாலும் யாரும் முறையாக பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவ, மாணவிகள் தரப்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் வந்த வண்ணம்  இருந்தது. இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு மேற்கொள்ள வேண்டிய  பணிகள் குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதன்பேரில், ராயபுரம், கன்னிகாபுரம், கேளம்பாக்கம், நந்தனம், நாகல்கேணி, வில்லிவாக்கம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 ஆதிதிராவிட நலத்துறைக்கு சொந்தமான மாணவ, மாணவியர் விடுதிகளில் பராமரிப்பு  பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கியுள்ளது. தொடர்ந்து, ரூ.50 லட்சம் செலவில்,  விடுதிகளில் வாட்டர் சப்ளை, கழிப்பறைகளை சரி செய்வது, நாப்கின் எரிப்பு மிஷின் வைப்பது,  எலக்ட்ரிக்கல் வயர்களை சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுதிகளில் வார்டன் பணியிடங்கள் காலியாக உள்ளது.மேலும் பல விடுதிகளுக்கு  சுற்றுச்சுவர் வசதி கூட  கிடையாது.இதனால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு வசதிக்காக 22 விடுதிகளிலும் சிசிடிவி கேமரா வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் பொதுப்பணித்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளின் பராமரிப்பு பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஆதிதிராவிட நலத்துறை மாணவ, மாணவி விடுதிகளில் வெளிநபர்கள் வருவதை தடுக்கும் வகையில், சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. இந்த சிசிடிவி  ேகமரா 1354 விடுதிகளிலும் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவை 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதன்பிறகு, தானாகவே அந்த பதிவு அழிந்து விடும். தேவையெனில் அந்த பதிவை  எடுத்து வைத்து கொள்ளலாம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hostels , Student, Student, Career, Adivasi Health, Hostel, CCTV Camera, Public Service Department
× RELATED சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் தாமதம்