×

செங்கம் அருகே டாஸ்மாக் கடையில் துணிகரம் : துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி

செங்கம்: செங்கம் அருகே டாஸ்மாக் கடையில்  துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த வடமாநில முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதில் காயமடைந்த 2 ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பெரும்பட்டம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு சண்முகம்(40) சூபர்வைசராகவும், லட்சுமணன்(45) சேல்ஸ்மேனாகவும் பணியாற்றி வருகின்றனர். நேற்று குடியரசு தினத்தையொட்டி கடைக்கு விடுமுறை என்பதால் அதிகளவு மது விற்பனை நடந்தது. அன்றிரவு 10 மணியளவில் வழக்கம்போல் கடை ஷட்டரை மூடிவிட்டு இருவரும் கலெக்‌ஷன் பணத்தை சரிபார்த்தனர். இரவு 11.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட முயன்றனர். அப்போது, பைக்கில் ‘மங்கி குல்லா’ அணிந்தபடி வந்த 2 மர்ம ஆசாமிகள், சண்முகம், லட்சுமணனிடம் இந்தியில் ஏதோ கேட்டனர். இவர்களுக்கு மொழி தெரியாததால், மது கேட்பதாக கருதி, ‘விற்பனை நேரம் முடிந்துவிட்டது. கடையை பூட்டிவிட்டோம்’ என தெரிவித்தனர். இதற்கு அவர்கள் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வந்து கடையை திறக்கும்படி ஆவேசமாக கூறினர். அவர்களில் ஒரு ஆசாமி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சூப்பர்வைசர் சண்முகத்தின் காலில் 3 முறை சுட்டார். இதில் அவரது கணுக்காலில் 1 குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. அவர் கீேழ விழுந்தார்.

பின்னர், லட்சுமணனிடம் கடையை திறக்கும்படி மிரட்டினர். இதனால் வேறுவழியின்றி லட்சுமணன் கடையை திறந்தார். அப்போது உள்ளே சென்ற ஒரு ஆசாமி, லாக்கரில் பணத்தை தேடியுள்ளார். அதில் பணம் இல்லாததால் லட்சுமணனை சரமாரி தாக்கிவிட்டு அவரது தலையை ஷட்டரில் மோதி உள்ளார். இதில் லட்சுமணன் படுகாயமடைந்தார். பின்னர், மர்ம ஆசாமிகள் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பினர். படுகாயம் அடைந்த 2 பேரும் செல்போனில் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் டிஎஸ்பி குத்தாலிங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த 2 பேரையும் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதன்பின், சம்பவ இடத்தில் கிடந்த 2 குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நடத்திய விசாரணையில், மர்ம ஆசாமிகள் இருவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத கடையை தேர்வு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. இதற்கிடையில் கடையில் விற்பனையான ₹2.75 லட்சம் பணத்தை சண்முகம் பைக்குள் சுற்றி, தான் அணிந்திருந்த ஸ்வெட்டருக்குள் வைத்திருந்தார். இதனால் மர்ம ஆசாமிகள் தாக்கி துப்பாக்கியால் சுட்டபோதும், இருவரும் பணத்தை காட்டிக்கொடுக்காமல் பாதுகாத்ததால் அந்த பணம் தப்பியது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : shop ,Tasmag ,Chengam , It'll store the gun, attempted robbery
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி