×

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட500 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட் : தமிழக அரசு திடீர் நடவடிக்கை

சென்னை: ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தமிழக அரசு நேற்று இரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில்  பணிகள் முடங்கிவிட்டன.  தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்க தமிழக  அரசு பல்வேறு வழிகளில் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டியது. அடுத்ததாக போராடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அரசு அதிரடி காட்டியது. ஆனாலும் போராட்டம் தீவிரமடைந்ததால், மறியல் செய்து கைதானவர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை மட்டும் சிறையில் போலீசார் அடைத்து வருகின்றனர்.

நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக வேலை நிறுத்த போராட்டத்தை மாவட்டம்தோறும் ஒருங்கிணைத்து நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை அரசு தயாரித்தது. போராட்டத்தில் தொடர்ந்து  ஈடுபட்டு வரும்  ஆசிரியர்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பலர்  அதிரடியாக சஸ்பெண்ட் செய்யும் பணி நேற்று இரவு தொடங்கியது.  

 விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை மாநில செயலாளர் கண்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை சங்க நிர்வாகி வைரவன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் கணேசன் உள்ளிட்ட 35 பேர் கைதாயினர். இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 22 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதேபோல் ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம்  18 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 18 பேர் உட்பட 19 பேர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 32 ஆசிரியர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 72 பேரும், நெல்லையில் 9, திருச்சியில் 6, நாகையில் 7,  திருவாரூரில் 6 பேரும், தஞ்சையில் 8, புதுக்கோட்டையில் 15, அரியலூரில் 3, பெரம்பலூரில் 4, கரூரில் 14 பேர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்கள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் ஏராளமானவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : editors ,strike action ,Tamilnadu Government , jacto gio, strike, suspended
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...