×

தங்கம் விலை இதுவரையில்லாத அளவு கிடுகிடு ... வரலாற்றில் முதல் முறையாக சவரன் ரூ.25,000

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் சவரன் ரூ.25,000 ஐ தொட்டு தங்கம் வரலாற்றில் புதிய சாதனையை படைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. வரும் நாட்களில் இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்றம், இறக்கம் நிலை இருந்து வந்தது. அதாவது குறைவதும், மறுநாள் உயருவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த மாதம் 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.24,168க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போனது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3092க்கும், சவரன் ரூ.24,736க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம்  விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.29 அதிகரித்து ஒரு கிராம் ரூ.3,121க்கும், சவரன் ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ.24,968க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து குறைவான அளவிலேயே உயர்ந்து வந்தது. ஆனால், நேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரித்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட அதிக விஷேச தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு பெற்றோர்களையும் கலக்கம் அடைய செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு இடியாக வரும் நாட்களில் தங்கம் விலை இன்னும் உயருவதற்கான வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளனர்.
சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்கான குறியீடு அறிவிப்பு வந்தது. அதில் அமெரிக்காவிற்கான பொருளாதார குறியீடு சரிவை சந்தித்து இருந்தது. மேலும் வேலை வாய்ப்பு குறியீடு சரிவை சந்தித்து இருந்தது. அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘’திடீரென’’ ஒரு உத்தரவை அறிவித்துள்ளார். அதாவது, அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் தடுப்பு வேலி அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதில் அவர்  பிடிவாதமாக இருந்து வருகிறார். இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்க அதிபர் எதிர்க்கட்சியினரை அழைத்தார். ஆனால், எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தையை அறவே மறுத்து விட்டனர். இது போன்ற செயல்களால் அமெரிக்காவின் பொருளாதாரம் கீழ் நோக்கி தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதன் தாக்கம் உலக சந்தையில் எதிரொலித்துள்ளது. இந்த தாக்கத்தால் உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை ₹25,000 தாண்டி விற்க தான் அதிக வாய்ப்புள்ளது. ஒரு கிராம் தங்கம் ₹3,121க்கு விற்கப்படுவது வரலாற்றில் இது தான் முதல் முறை. இதற்கு முன்னர் ஒரு கிராம் தங்கம் ₹3,110க்கு தான் விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் உச்சக்கட்ட விலையாக இருந்தது. இந்த சாதனை தற்போதைய விலை முறியடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தங்கம் விலையில் இன்று மாற்றம் இருக்காது
இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். நாளை திங்கட்கிழமை மீண்டும் மார்க்கெட் தொடங்கியதும் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது? என்பது தெரியவரும்.

வெள்ளி விலையும் உயர்ந்தது
வெள்ளி விலை நேற்று முன்தினம் ₹42,200 (1 கிலோ) விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தை போல வெள்ளியின் விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிலோவுக்கு ₹1000 உயர்ந்து, ஒரு கிலோ ₹43,200க்கு விற்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : time ,Savaren , Gold price, hike, shaving Rs 25,000
× RELATED அமெரிக்க பூங்காவில் முதன்முறையாக...