×

ஆஸி. ஓபன் டென்னிஸ் ஒசாகா சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றதுடன் தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தையும்  வசப்படுத்தினார்.இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவுடன் (8வது ரேங்க்) நேற்று மோதிய ஒசாகா (4வது ரேங்க்), டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டில் 7-6 (7-2) என்ற கணக்கில் வென்று  முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த குவித்தோவா 7-5 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி குவித்தோவாவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஒசாகா 7-6 (7-2), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக ஆஸி. ஓபன் கோப்பையை  முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 27 நிமிடத்துக்கு நீடித்தது. கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் பைனலில் செரீனாவை வீழ்த்தி தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த அவர், தற்போது 2வது  பட்டத்தை கைப்பற்றியதுடன் மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒசாகா 72வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2015ல் செரீனா தொடர்ச்சியாக 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்த நிலையில், அதன் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் வீராங்கனை என்ற பெருமையும் ஒசாகாவுக்கு கிடைத்துள்ளது. ஆண்கள் ஒற்றையர்  பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - ரபேல் நடால் (ஸ்பெயின்) இன்று மோதுகின்றனர். இப்போட்டி டென்னிஸ் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத்  தூண்டியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aussie ,Open Tennis Osaka Champion , Aussie. Open Tennis, Osaka, Champion
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...