×

ரோகித் 87, தவான் 66 ரன் விளாசல்90 ரன் வித்தியாசத்தில் நியூசி.யை பந்தாடியது இந்தியா: 2-0 என முன்னிலை பெற்றது

மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்து அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றது.பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில்  வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர், சவுத்தீ நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஈஷ் சோதி, கிராண்ட்ஹோம் இடம் பெற்றனர். ரோகித்,  தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர்.பொறுப்புடன் விளையாடிய இருவரும் அரை சதம் அடித்ததுடன், முதல் விக்கெட்டுக்கு 25.2 ஓவரில் 154 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். இந்த ஜோடி 14வது  முறையாக 100+ பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. தவான் 66 ரன் (67 பந்து, 9 பவுண்டரி) எடுத்து போல்ட் பந்துவீச்சில் லாதம் வசம் பிடிபட்டார். ரோகித் 87 ரன் (96 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெர்குசன் பந்துவீச்சில்  கிராண்ட்ஜோம் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் கோஹ்லி - ராயுடு ஜோடி 3வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது. கோஹ்லி 43 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ராயுடு 47 ரன் எடுத்து (49 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) பெர்குசன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச்  கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன் குவித்தது. டோனி 48 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கேதார் 22 ரன் (10 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல்  இருந்தனர். பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 21 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நியூசி. பந்துவீச்சில் போல்ட், பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 325 ரன் எடுத்தால் வெற்றி என்ற  கடினமான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசி. முன்வரிசை வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல்  அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

அந்த அணி 30.5 ஓவரில் 166 ரன்னுக்கு 8 விக்கெட்டை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. கப்தில் 15, மன்றோ 31, கேப்டன் வில்லியம்சன் 20, டெய்லர் 22, லாதம் 34, நிகோல்ஸ் 28, கிராண்ட்ஹோம் 3 ரன்னில் வெளியேற,  சோதி முதல் பந்திலேயே டக் அவுட்டானார். இந்த நிலையில், பிரேஸ்வெல் - பெர்குசன் ஜோடி 9வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 58 ரன் சேர்த்தது. பிரேஸ்வெல் 57 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பெர்குசன் 12 ரன்  எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 40.2 ஓவரிலேயே 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிரென்ட் போல்ட் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 4, புவனேஷ்வர், சாஹல் தலா 2, ஷமி, கேதார்  தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என முன்னிலை பெற்றது. ரோகித் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்றாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை காலை  7-30க்கு தொடங்குகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dwayne 66 ,New Zealand ,India , Roghit, Dhawan, Newcastle, India
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை