×

குஜிலியம்பாறை அருகே பழமையான கோயில் தேரை புதுப்பிக்க கோரிக்கை

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே உள்ள 500 ஆண்டுகள் பழமையான ராமகிரி நரசிங்க பெருமாள் கோயில் தேரை புதுப்பிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ராமகிரியில் 500 ஆண்டுகள் பழமையான கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயில் சேதமடைந்ததால், கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. தற்போது பொதுமக்கள் பங்களிப்புடன் கோயில் கட்டிட சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கோயிலுக்கு  சொந்தமான 500 ஆண்டுகள் பழமையான தேர் சீர் செய்யப்படாமல் உள்ளது. சேதமடைந்த தேரை தென்னங்கீற்று கூரையின் கீழ் நிறுத்தியுள்ளனர்.

மழைக்காலங்களின்போது, கூரைக்குள் மழைநீர் ஒழுகுவதால் இந்த தேர் மேலும் வீணாகி வருகிறது. இந்த தேரை புதுப்பிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பிரசித்தி பெற்ற இத்தேரை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple toad ,Gujuliyambaram , Gujiliyambara, the oldest temple chai, renewal request
× RELATED குஜிலியம்பாறை அருகே 500 ஆண்டு தேர் அழகு பெறுமா?