×

நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிநீக்கம்: தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் பேரம் பேசியதால் நடவடிக்கை

நாமக்கல்: நாமக்கலில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பேரம் பேசியதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌரி சங்கரை பணிநீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவு வழங்கியது. விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் கௌரிசங்கர் பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது. நாமக்கல் அடுத்த வல்லிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் நாகர்கோவிலை சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர். இதனால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயம் அடைந்தவர்கள் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் 108 ஆம்புலன்சை ஓட்டி வந்த ஓட்டுநர் கௌரி சங்கர் என்பவர், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரை தொடர்பு கொண்டு விபத்து குறித்து கூறியதாக சொல்லப்படுகிறது.

உடனடியாக அங்கு வந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் காயம் அடைந்தவர்களை நிர்பந்தம் செய்து நாமக்கல் சேலம் சாலையில் உள்ள அக்சாய மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தொடர்பு கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கௌரி சங்கர், காயமடைந்தவர்களை நாகர்கோவில் அழைத்து செல்ல உள்ளதாக கேள்விப்பட்டதாகவும், எனவே தனக்கு 500 ரூபாய் பத்தாது 1000 ரூபாய் வேண்டும் என்ற தொனியில் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதனால் ஓட்டுநர் கௌரி சங்கரை பணிநீக்கம் செய்து சுகாதாரத்துறை உத்தரவு வழங்கியது. நாமக்கல் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டும் சிலர் பணத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு காயம் அடைந்தவர்களை அழைத்து செல்லும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் பணம் கொடுப்பதாகவும் பரவலாக புகார் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ambulance driver sackings ,Namakkal , 108 ambulance, redundancy, bargain, private ambulance
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை