×

கட்டிடங்கள் இடித்து 4 ஆண்டுகளாகியும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருப்பணிகள் மந்தம்

சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருப்பணிகள் முடியாததால் பக்தர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி கோட்டைமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா எடுக்கப்படும். இவ்விழாவின்போது சேலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு ெபாங்கல், மாவிளக்கு படையிலிட்டு வருவது வழக்கம்.

இக்கோயிலில் கட்டிடம் பழுதடைந்ததால், அக்கட்டிடத்தை இடித்துவிட்டு, புதியதாக திருப்பணி தொடங்க அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு சுற்றுப்பிரகார மண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்டவைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் மூலவர் அம்மன் கருவறையை அகற்ற பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்காக பக்தர்கள் பல வகைகளில் போராட்டம் நடத்தினர். இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் அம்மன் கருவறை இடித்து அகற்றப்பட்டது.

இதன்பின்னர், கட்டுமான பணியில் எவ்வித தொய்வும் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மன் கருவறை அகற்றியபின்பும் திருப்பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. திருப்பணியை துரிதப்படுத்தி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த ேவண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சேலத்தை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது: ஆகம விதிப்படி கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று உள்ளது. ஆனால் பெரும்பாலான கோயில்களில் இந்த ஆகம விதியை கடைப்பிடிப்பதில்லை. தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் கும்பாபிஷேகம் நடத்தாமல் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. இந்த நிலையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்காக,  கடந்த 2015ம் ஆண்டு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.

 ஆனால் திருப்பணிகள் நடப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிலமட்டத்தில் இருந்து தூண்கள் அமைத்து 4 அடி உயரத்திற்கு மண்ணை கொட்டி சமப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தூண்கள் எழுப்பி 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திருப்பணிகள் நடக்காததால், மண் கொட்டி சமப்படுத்திய இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. கால்நடைகள் மேச்சல் நிலமாக மாறியுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் காட்சி தந்த இடம், தற்போது களையிழந்து காணப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் நடப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. ஆனால் தற்போது எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் திருப்பணி தொடர்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை.

மேலும் திருப்பணிக்காக கல்தூண்கள் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலில் இறக்கப்பட்டது. இவை மழை, வெயிலில் காய்ந்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டாக திருப்பணி முடிந்து, விரைவில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். எதிர்வரும் ஆடிப்பண்டிகைக்கு இன்னும் ஆறு மாதம்தான் உள்ளது. அதற்குள் திருப்பணியை முடித்து, கும்பாபிஷேக விழா நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : demolition ,buildings ,recession ,Salem Kottai Mariamman Temple , salem, renovation, mariyamman temple,devotes
× RELATED குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை