×

சிவகங்கை அருகே மாயமாகி போன மாம்பட்டி காடு

* மருத்துவ செடிகள் அழிப்பு மீண்டும் பராமரிக்க கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை அருகே மருந்துச்செடிகள் கொண்ட மாம்பட்டி காடு பராமரிப்பில்லாமல் அழிந்து வருகிறது. சிவகங்கை அருகே மாம்பட்டியில் பட்டபிளான்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு மருந்துச்செடி உற்பத்தி தோட்டம் அமைக்கப்பட்டது. சுமார் 200 எக்டேர் பரப்பளவில் கறிவேப்பிலை, மருதாணி, வேம்பு, இழுப்பை, தூதுவளை, நாவல், மாதுளை, ஆடாதொடை, கரிசாலை, வல்லாரை, சோற்றுக்கற்றாழை, அரைநெல்லி, ஓமவல்லி, பெரியநெல்லி, வெள்ளைக்குண்டுமணி, சிறியாநங்கை, சீமைஆத்தி, கொய்யா உட்பட 18 வகையான, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவச்செடிகள், மூலிகைகள் நடவு செய்யப்பட்டு பாதுகாப்பிற்காக காட்டை சுற்றிலும் முள்வேலி அமைக்கப்பட்டது.

சில ஆண்டுகள் மட்டும் பாதுகாக்கப்பட்டு வந்த செடிகள் பின்னர் பராமரிப்பின்றி போனது. செடிகளை சுற்றிலும் காட்டுச்செடிகள், முற்புதர்கள் மண்டி மருத்துவச்செடிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. தடுப்பு வேலிகளும் முற்றிலும் சேதமைந்துவிட்டன. நூழைவுவாயிலில் இருந்த இரும்பு கேட்டை காணவில்லை. கால்நடைகளும் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. எனவே வனத்துறை இக்காட்டை மீண்டும் பராமரிக்க வேண்டும். மேலும் இக்காட்டை சுற்றிலும் இடிந்த சுவர்கள், பானைகள், ஓடுகள் போன்ற வரலாற்று சிறப்புமிக்க பொருட்கள் காணப்படுகின்றன. எனவே இங்கு தொல்லியல் துறையும் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இங்க... இப்படி ஒரு காடு இருந்ததா?

இப்பகுதி ஊர் பிரமுகர்கள் கூறியதாவது: இந்த காட்டில் மயில்கள் அதிகமாக இருந்தது. வேட்டை நாயை மயில்கள் எதிர்த்து சண்டையிட்டதால் மயில்ராயன் கோட்டை நாடு என இப்பகுதிக்கு பெயர் வந்தது. அரண்மனை புன்செய் உள்பட பல்வேறு பெயர்களில் இந்த காட்டில் உள்ள பகுதிகளை அழைப்பது வழக்கம். இங்கு வனத்துறை சார்பில் மருத்துவச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது தற்போதைய வனத்துறை அலுவலர்களுக்கே தெரியவில்லை.

இப்படி ஒரு காடு இருந்ததா என கேட்கின்றனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்காட்டில் மீண்டும் மருந்துச்செடிகள் நட்டு பராமரிப்பு செய்ய வேண்டும். தற்போது சித்த மருத்துவத்தை மக்கள் நாட ஆரம்பித்துள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டம் முழுவதும் காடுகளில் இதுபோன்ற தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும். இந்த காட்டை சுற்றிலும் இடிந்த சுவர்கள், பானைகள், ஓடுகள் இன்றும் காணப்படுகிறது. எனவே இப்பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest ,Sivagangai , Sivagangai, mompatti forest,forest department, medical trees
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...