×

பட்டிவீரன்பட்டி பகுதியில் அடிக்கடி பஞ்சராகும் அரசு பஸ்கள்

பட்டிவீரன்பட்டி :  பட்டிவீரன்பட்டி பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பஞ்சராகி வருகின்றன. வத்தலக்குண்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு பகுதிகளுக்கும், தாண்டிக்குடி, பெரும்பாறை மலைப்பகுதிகளுக்கும் தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் பழைய மாடல் பஸ்களே அதிகளவில் இயங்கி வருகின்றன. குறிப்பாக தள்ளினால் ஸ்டார்ட் ஆகுவது, மழை வந்தால் உள்ளேயே குடை பிடிப்பது, ஓடும்போது திடீரென கண்ணாடி உடைவது, பிரேக் டவுன், அதிகளவு புகையை கக்குவது, மாற்று டயர் இல்லாதது உள்ளிட்ட பஸ்களே அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அடிக்கடி பஸ்கள் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்று விடுகின்றன. இதனால் மாணவ மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைகின்றனர். நேற்று வத்தலக்குண்டுவில் இருந்து சித்தையன்கோட்டை வரை செல்ல கூடிய அரசு டவுன் பஸ் சித்தரேவில் பஞ்சராகி போனது. மாற்று டயர் இல்லாததால் நீண்டநேரம் காத்திருந்த பயணிகள் கடுப்பாகி மாற்று பஸ்சில் சென்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தின் பல பகுதிகளில் பல ஆயிரம் கிமீ தூரம் ஓடிய பஸ்களே வத்தலக்குண்டு பணிமனையில் உள்ளன. பஸ் கட்டணத்தை  மட்டும் பல மடங்கும் உயர்த்தும் அரசு பராமரிப்பு பணிகளையும் கொஞ்சமாவது பார்க்க வேண்டும். எனவே வத்தலக்குண்டு பணிமனையில் மோசமான நிலையில் உள்ள அரசு பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் மாற்று டயர் கட்டாயம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : panchayat areas ,Pattiviranpatti , Government bus, breakdown, puncher, batlagundu
× RELATED கோத்தகிரியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு