×

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகா சமர்ப்பித்த திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை உடனே நிராகரித்து  திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய நீர் ஆணையம் அளித்திருந்தது. இந்த அனுமதி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கடந்த ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று வெளியான தீர்ப்பு ஆகியவற்றை மீறியதாக உள்ளது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு, ‘மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை 18ம் தேதியன்று மத்திய நீர் ஆணையத்திடம் கொடுத்து, மேலும் சில அனுமதியை கோரியிருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது. மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளிக்கப்பட்ட அனுமதியை திரும்ப பெற மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கடந்த நவம்பர் 30ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த வகையில் இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் போய்விடும் என்று அதை நம்பியுள்ள தமிழகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர்.  எனவே இந்த சூழ்நிலையில், நீங்கள் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, கர்நாடகா அரசு சமர்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையை உடனே நிராகரித்து அதை திரும்ப அனுப்ப வேண்டும் என்று மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு துறைக்கும், மத்திய நீர் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karunakake ,Narendra Modi ,dam ,Meghadad , Meghadad dam, Modi, chief minister, letter
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...