×

பெரும்பான்மையினர் பேசும் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம் : முதல்வர் எடப்பாடி பேச்சு

சென்னை:  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் உடடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என சென்னையில் நடைபெற்ற வீர வணக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நேற்று சென்னையில் வீரவணக்க நாள் விழா வணக்க நாள் நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:மொழி தான் மனித வாழ்வின் இதயம், மனிதனுக்கு முகவரி, மனிதனின் உயிர். மொழிக்கு தன்னையே அர்ப்பணித்து தியாகம் செய்த செம்மல்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக, அஞ்சலி செலுத்துகின்றவிதமாக கழகத்தின் சார்பாக அஞ்சலி செலுத்துகின்ற தினமான இன்று வீரவணக்க நாள் எடுக்கின்றோம். பேசுகின்ற மொழியைக் கொண்டு தான் ஒருவர் யார், அவரின் சிந்தனையின் அடித்தளம் என்ன என்பதையும் அறிந்துகொள்ள முடியும். தாய்மொழிதான் மனிதனின் பலம். ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது தவறானது. பெரும்பாலான மக்கள் பேசுகின்ற மொழி என்பதாலேயே அந்த மொழியை மக்கள் பேச வேண்டும், படிக்க வேண்டும் என்ற ஒரு சர்வாதிகார சிந்தனையாகத்தான் இருக்குமே தவிர, சமத்துவத்தையும் சகோதரப் பண்பையும் அது வளர்க்காது.

அதிக மக்கள் பேசுவதால் இந்தி ஆட்சிமொழி எல்லோரும் படிக்க வேண்டிய மொழி என்றால் அதிகமாக இருக்கின்றது என்பதற்காக காக்கையை தேசியப் பறவையாக ஆக்க முடியுமா? அழகான மயில் தானே நம் தேசியப் பறவை என்று ஆணித்தரமாகக் கேட்டார் அண்ணா. இந்திக்கு எதிராக போராடிய உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக தான் வீரவணக்கம் நாளை கொண்டாடுகின்றோம்.
தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ் எங்கள் முன்னோர் எங்களுக்கு அளித்துச் சென்றிருக்கும் பகட்டான செல்வம். நாங்கள் தமிழர்கள் என்ற பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்வோமே தவிர, ஒரு நாளும் எதற்காகவும் எங்கள் மொழியை, இனத்தை, பெருமையை யாரும் இரண்டாம் நிலைக்குத் தள்ள அனுமதிக்கமாட்டோம். தமிழ் மொழி காப்பதற்காக அதிமுக எப்பொழுதும் துணை நிற்கும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை ஆண்டொன்றுக்கு ₹ 14,719 கோடி வழங்கியது. ஆசிரியர்களைப் பொறுத்தவரைக்கும் எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்று சொல்வார்கள். ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். நம்முடைய மாணவர்கள், இந்த நாட்டினுடைய எதிர்கால இந்தியாவையும், தமிழகத்தையும் ஆளக்கூடியர்களை உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியர்கள். ஆனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்துவது வேதனை, வருத்தம் அளிக்கிறது. யார் முதலமைச்சராக இருந்தாலும், இருக்கின்ற நிதியை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக வாழ வேண்டுமென்பது தான் அரசின் நிலை. அந்த நிலையில் தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். கஜா புயலினால் பல்வேறு பாதிப்பு உண்டாகி அதற்கும் நிதி தேவைப்பட்டது. அரசாங்கம் நிதி வைத்துக் கொண்டு வழங்காதது போன்ற ஒரு தோற்றத்தை எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தி அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டு அரசு ஊழியர்கள் போராட்டத்திலே இறங்கியிருப்பது தவறு. இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலை, நிதிப்பிரச்சினையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல, அரசுக்கு ₹100 வருகிறதென்றால், அதில் ₹75 சம்பளம், ஓய்வூதியம், நிர்வாக செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள நிதியில்தான், மின்சார விளக்கு அமைத்தல், சாலைகள் அமைத்தல், தண்ணீர் கொடுப்பது, கல்விக்கூடம் கட்டுவது போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றோம். இதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டுமென்பதற்காக கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.எனவே, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களைப் பெற்றிட, தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர, தேவையான நிதிகளை மத்தியிலே இருந்து பெற, நம்முடைய கழகத்தின் சார்பாக நிறுத்தப்படுகின்ற வேட்பாளர் வெற்றி பெற வேண்டும். இன்றைக்கு அதிக அளவிலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற காரணத்தினால், காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி, மேகதாது பிரச்சினையானாலும் சரி, இந்த நாட்டு மக்களே வியக்கின்ற அளவிற்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய பணியை ஆற்றினார்கள். அதே நிலை உருவாக்குவதற்கு அத்தனை பேரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister , Vela Vaishnavasam, Chief Minister Edappadi Palaniasamy, Dictatorship, Language
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...