ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : முதல்வர் குமாரசாமியுடன் அமைச்சர் பாட்டீல் மோதல்

பெங்களூரு: கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்தது தொடர்பாக முதல்வர் குமாரசாமிக்கும், உள்துறை அமைச்சர் பாட்டீலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான  காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. குமாரசாமிக்கும், காங்கிரசை சேர்ந்த அமைச்சர்களுக்கும் அடிக்கடி பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளால் மோதல் ஏற்பட்டு வருகிறது.  சமீபத்தில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், உள்துறை அமைச்சர் பொறுப்பு  காங்கிரசை சேர்ந்த எம்.பி பாட்டீலுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த பதவி மாநில துணை  முதல்வர் பரமேஸ்வரிடம் இருந்தது.

உள்துறை  அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் போலீஸ் துறையில் ஏதேனும் மாற்றங்கள்,  குறைபாடுகள், ஏற்பட்டால் அதை எம்.பி பாட்டீலிடம் தான் கேட்டு முடிவு எடுக்க  வேண்டும் என்று மஜத- காங்கிரஸ் இடையே உடன்பாடு உள்ளது. இதை பொருட்படுத்தாத குமாரசாமி, சில தினங்களுக்கு முன் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்.

இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த அமைச்சர்  எம்.பி பாட்டீல், முதல்வர் குமாரசாமியை மிகவும் கடிந்து கொண்டுள்ளார். ‘ஐ.பி.எஸ் அதிகாரிகள்  அனைவரும் மாநில முதல்வரின் கட்டுப்பாட்டில் வருகின்றனர். அவர்களை பணியிட  மாற்றம் செய்யவேண்டுமென்றால் உள்துறை அமைச்சரின் அனுமதியை பெற வேண்டும். இல்லை என்றால், ஆலோசனையாவது நடத்தியிருக்க வேண்டும். ஆனால், எதுவும் சொல்லாமல் எனக்கு தெரியாமல் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம்  செய்திருப்பது என்னை அவமதிப்பது போன்றது’ என்று குமாரசாமியை பாட்டீல் கண்டித்துள்ளார். இது, கர்நாடகா அரசியல்  வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>