×

புழல் சிறையில் அடைத்த 3 நாளில் கைதியிடம் கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்

சென்னை: புழல் சிறையில் அடைத்த 3வது நாளில், கொலை கைதி அறையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புழல் சிறை விசாரணை பிரிவில் 2000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு உள்ள கைதிகளிடம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன்கள் புழக்கம் அதிகம் உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், புழல் சிறையில் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சூளைமேட்டை சேர்ந்த ரவுடி குமரேசன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் ஒருவரான கார்த்திக் (எ) டோரி கார்த்திக் (37) என்பவரிடம் 50க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சிறைத்துறை அதிகாரிகள் டோரி காத்திக்கை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 23ம் தேதி புழல் சிறையிலடைக்கப்பட்ட போது போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை சிறைக்குள் எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.புழல் சிறைக்கு போலீசார் கைதிகளை அழைத்து வரும்போது 3 கட்ட சோதனை நடத்துவார்கள். அதன் பிறகுதான் கைதிகளை சிறையில் அடைப்பார்கள். உயர் பாதுகாப்பு கொண்ட புழல் சிறையில் சிறை அதிகாரிகளின் கண்காணிப்பை மீறி போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை டோரி கார்த்திக் எப்படி எடுத்து வந்தார், அவருக்கு சிறை காவலர்கள் உதவி செய்தார்களா என சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், டோரி கார்த்திக் மீது, புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புழல் சிறை கைதியிடம் போதை மாத்திரை, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prisoner ,prison , Punishment imprisonment, cannabis and drugs seizure
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...