×

கொலை, கொள்ளையில் ஈடுபடும் எடப்பாடி அரசையும், துணை நிற்கும் மத்திய அரசையும் விரட்ட சபதம் ஏற்போம் - ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொலை, கொள்ளையில் ஈடுபடும் எடப்பாடி அரசையும், துணை நிற்கும் மத்திய பாஜ அரசையும் விரட்ட தியாகிகள் பெயரால் சபதம் ஏற்போம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று மாலை நடந்தது. திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். அவர் பேசியதாவது:  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் பட்டி தொட்டிகள் தோறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். 80 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தமிழ் மண்ணில், தமிழ் மொழிக்காக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ராஜாஜி முதல் மோடி வரை இந்தியை தொடர்ந்து திணித்து கொண்டுதான் வருகின்றனர்.  நாம் இந்தியை தொடர்ந்து விரட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த போராட்ட களத்தில் எத்தனையோ உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.

தண்டவாளத்தில் தலை வைத்து படு என்றாலும், அமைச்சர் பதவி என்றாலும் இரண்டையும் ஒன்றாக கருதுபவர்தான் எனது தம்பி கருணாநிதி என்று புகழ்ந்தவர் அண்ணா. அந்த மொழிப் பேராட்ட உணர்வோடுதான் நான் இங்கே உங்கள் முன் நிற்கிறேன். சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 8ம் வகுப்பு வரை இந்திதான் பயிற்றுமொழி என்றார். உடனே நான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன். அதில் மீண்டும் 1965ம் ஆண்டை உருவாக்கி விடாதீர்கள் என்று எச்சரித்தேன். பிறகு நான் அப்படி கூறவில்லை என்று மறுத்தார். தொடர்ந்து இந்திக்காக அறிவிப்பு வெளியிடுவதும், எதிர்ப்பு தெரிவித்தால் மறுப்பு வெளியிடுவதும்தான் மத்திய அரசின் கொள்கையாக இருக்கிறது. பிரதமராக மோடி வந்ததும் இந்தியோடு சேர்த்து சமஸ்கிருதத்தை திணிக்கும் பணியையும் செய்து வருகிறார்கள்.

பசு பாதுகாப்பு, இந்தி திணிப்பு, சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு இதுதான் பாஜவின் கொள்கை முழக்கமாக இருக்கிறதே தவிர மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்க முடியாத நிலையில் மோடி ஆட்சி நடத்துகிறார். இரண்டு நாட்களில் மோடி மதுரை வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் அவரை நாங்கள் எதிர்க்கவில்லை. வரவேற்கிறோம். ஆனால் நான்கரை ஆண்டுளாக என்ன செய்தார் என்று நான் மோடியை  கேட்கிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாய்க்கு வந்த வாக்குறுதிகளை முழங்கினீர்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எய்ம்ஸ் அமைப்போம் என்றால் எங்காவது அமைக்கப்பட்டதா? இதுதான் மோடி தந்த உறுதி மொழியின் லட்சணமா, 4 ஆண்டுகள் முடிந்த பின்பு இப்போது தேர்தல் வர இருப்பதால் அடிக்கல் நாட்ட வருகிறார். 5 ஆண்டுகளாக என்ன செய்தார்.

தமிழகத்தில் 11 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக ஆக்குவோம் என்றார். அது நடந்ததா? தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு குழு அமைப்போம் என்றார். குழு அமைக்கப்பட்டதா? எந்த முகத்தோடு மோடி ஓட்டு கேட்க தமிழகம் வருகிறார். வெட்கமாக இல்லையா? ஈரோட்டை மஞ்சள் நகரம் என்று கூறி மஞ்சள் விவசாயிகள் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்துவோம் என்றார். மோடி முகம்தான் பிரகாசமாக உள்ளது. மஞ்சள் விவசாயிகள் வாழ்க்கை பிரகாசமாக இல்லை. திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்போம் என்றார். சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றார். மரவள்ளி கிழங்கு விவசாயிகள் வாழ்வை வளமாக்குவோம் என்றார். விவசாயிகள் விளை பொருட்களை சந்தைப்படுத்த சிறப்பு வசதிகளை செய்வோம் என்றார். பின்தங்கிய கிருஷ்ணகிரியை முன்னேற்றுவோம் என்றார். ஒரு திட்டமாவது நிறைவேற்றினாரா? கன்னியாகுமரியை உலக புகழ் பெற்ற நகரமாக மாற்றுவோம் என்றார். அங்கு ஒழுங்கான சாலை வசதி கூட இல்லை. இதையெல்லாம் செய்யாமல் வெட்கம் கூச்சம் இன்றி எப்படி மதுரைக்கு வரு்கிறார். மக்கள் கேட்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலா?

இவ்வளவு பொய் பேசும் பிரதமர் இந்தியாவில் அல்ல. உலகிலேயே காண முடியாது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற பாடல் வரும். எனக்கு பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே என்று பாடத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு பொய்களை மூட்டை மூட்டையாக அவிழ்த்து விட்டார். உலக நாடுகளில் உள்ள கருப்பு பணங்களை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று மோடி சொன்னாரே? ₹15 ஆயிரம் அல்ல. ₹15வது போட்டாரா?. கள்ள நோட்டுக்கு பதிலாக நல்ல நோட்டுக்கு தடை போட்டு துக்ளக் தர்பார் ஆட்சியை மோடி நடத்துகிறார்.

ரபேல் விமான பேர ஊழல், 41 சதவீதம் விலையை உயர்த்தி வாங்கியதால் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை மோடி விளக்கம் தந்தாரா? இல்லை. மோடி ஆட்சியில் தான் வராக்கடன் இருமடங்கு அதிகமாகியுள்ளது. அது ஊழல் இல்லையா?. ரபேலை விட பெரிய ஊழலான பயிர்கடன் ஊழலை பத்திரிகையாளர் சாய்நாத் அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு பதில் உண்டா? விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி போன்றவர்கள் கடன் வாங்கிவிட்டு ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினார்கள். அவர்களை தப்பிக்கவிட்டவர்கள் யார், ஊழலை கண்டுபிடித்து உத்தமனாக இருப்பேன் என்று மோடி கூறினார். 5 ஆண்டுகள் ஆன பிறகு கூட லோக்பால் அமைக்கவில்லை. ஊழலுக்கு மோடி பக்கபலமாக இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி. உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்திருக்கிறது. ரபேல் புகார் பற்றி விசாரிப்போம் என்று கூறியதற்காக சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா உடனே மாற்றப்பட்டார். இப்படிப்பட்டவருக்கு ஊழல் பற்றி பேச யோக்கியதை உண்டா? இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கட்சி தலைவர்கள் இன்று ஓரணியில் திரண்டிருக்கிறோம். ஒருவாரத்துக்கு முன்பு கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டிய பொதுக்கூட்டத்தில் 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவோம் என்று அனைவரும் முழங்கினர். நான் பேசும் போது, இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம்’ என்றேன்.

பாஜ ஆட்சி மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சி நடத்தும் கொலைகார கும்பலையும் விரட்ட வேண்டும். அது பாசிச அரசு. இது கொலைகார அரசு. இந்த ஆட்சியை நாம் அப்புறப்படுத்தியாக வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளையில் குற்றச்சாட்டுக்கு ஆளான பின்பும் முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமி ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமா? நீ குற்றமற்றவர் என்பதை நிரூபித்துவிட்டு பதவிக்கு வா.. நான் மாலை போட்டு வரவேற்கிறேன். ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறை சென்றார். அவரது தோழி சசிகலா சிறையில் இருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இப்போது எங்கிருந்திருப்பார். இறந்தவர் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஊழல் செய்ததற்காக முதல்வர்கள் தண்டனை பெற்றதுண்டு. ஆனால் கொலைகாரன் என்ற குற்றச்சாட்டுக்கு எந்த முதல்வரும் ஆளானதில்லை.

அந்த குற்றச்சாட்டுக்கு ஆளான எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது. சிறை செல்ல தயாராக இரு. ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட போது என்ன நடக்கிறது என்ற செய்தி வந்ததா? ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். டிவி பார்த்தார் என்ற செய்தி தான் வந்தது. திடீரென இறந்தார் என்ற செய்தி வந்தது. அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதால் தான் விசாரணை கமிஷன் நடக்கிறது.
அந்த விசாரணை கமிஷனை கேட்டவர் ஜெயலலிதா ஆவியுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம். இரண்டு நாட்களுக்கு முன்பு தியாகத்துடன் ஹோமத்தையும் அவர் கோட்டையில் வளர்த்திருக்கிறார். ஹோமத்தை வீட்டில் வளர்க்கட்டும். கட்சி அலுவலகத்தில் வளர்க்கட்டும். கோட்டையில் வளர்த்தால் அது யார் அப்பன் வீட்டு பணம். திமுக விரைவில் ஆட்சிக்கு வந்த அடுத்த விநாடி ஜெயலலிதா மர்ம மரணம் பற்றிய உண்மைகள் வெளிவரும். குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் தள்ளுவது தான் எனது முதல் வேலை.

117 எம்எல்ஏக்களுடன் இருக்க வேண்டிய அரசு மெஜாரிட்டியை இழந்து மைனாரிட்டியுடன் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. 11 எம்எல்ஏக்கள் வழக்கு தூக்கில் தொங்குகிறது. எடப்பாடி உள்ளே சென்று தனக்கு பதவி கிடைக்கும் என்று ஓபிஎஸ் யாகம் வளர்த்ததாக முதலில் செய்தி கிடைத்தது.

ஆனால் இப்போது 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வர உள்ளதால் ஓபிஎஸ் யாகம் வளர்த்ததாக செய்திகள் வருகிறது. இப்படிப்பட்ட அடிமையான கோழைத்தனமான தமிழகத்தின் மானத்தை அடமானம் வைத்து கொலை, கொள்ளை செய்யும் இந்த ஆட்சியையும், இதற்கு துணை நிற்கும் பாசிச பாஜ ஆட்சியையும் அகற்ற சபதம் ஏற்போம். தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

பேச்சை நிறுத்திய மு.க.ஸ்டாலின்
பெரம்பூரில் நேற்று நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மசூதியில் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. உடனே மு.க.ஸ்டாலின் தனது பேச்சை நிறுத்தினார். அந்த ஒலி முடிந்த பின்பு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killing ,speech ,Stalin ,government , Murder, robbery, escapade state, mkstallin
× RELATED நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு...