×

உலக முதலீட்டாளர் மாநாடு...எவ்வளவு ஒப்பந்தங்கள்? எத்தனை பேருக்கு வேலை? : ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: தமிழகத்தில் 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளால் தமிழகத்தில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு கடந்த 23 மற்றும் 24ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி சிங்கப்பூரைச் சேர்ந்த ‘கேஸ்கெட் எனர்ஜி’ என்ற தனியார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:

மாநிலத்தின் வளர்ச்சிக்காகத்தான் இதுபோன்ற வர்த்தக மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.மேலும், உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:விசாரணையின்போது, கடந்த 2015ல் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தொழில் துறை, எரிசக்தி துறை, தகவல் தொடர்புத்துறை, விவசாயம் உள்பட 7 துறைகளில் ₹2.42 லட்சம் கோடி மதிப்புள்ள 98 புரித்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் மூலம்  4 லட்சத்து 70,000 பேருக்கு  வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல், தற்போது நடந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் கிடைக்கும். மேலும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டனவா, அதன் மூலம் தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன, அவற்றின் தற்போதைய நிலை என்ன? சென்னையில் கடந்த 23, 24ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக வரும் ஜூன் 10ம் தேதி தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.







பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Investor Conference , World Investors Conference, iCort Grievance, Memorandum of Contracts, Employment
× RELATED உலக முதலீட்டாளர் மாநாட்டை...