×

கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்தற்கான கெடுவை பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது : டிராய் திட்டவட்டம்

சென்னை : கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. முன்னதாக கேபிள் டிவி ஒளிபரப்பு தொடர்பாக டிராய் நிறுவனம் புதிய கொள்கை விதிமுறையை அறிவித்தது.இதன்படி, கேபிள் டிவி வழங்கும் அனைத்து சேனல்களை பார்ப்பதற்கு பதிலாக, குறிப்பிட்ட சேனலை மட்டும் பணம் கொடுத்து பொதுமக்கள் பார்த்தால் போதும் என கூறப்பட்டிருந்தது. இந்த புதிய விதிமுறை தங்களை பாதிப்பதாகவும், இதன்மூலம் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பலனடைய முடியும் என்றும் கேபிள்டிவி ஆப்ரேட்டர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 மேலும் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ம் தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கேபிள் டி.வி. பொதுநல சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. டிடிஎச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. டிராய் உருவாக்கியிருக்கும் பிரத்யேக வலைத்தளத்தில் 5 வழிமுறைகளை கடந்து அவரவர் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த சேவையை கொண்டு விரும்பிய சேனல்களுக்கான கட்டணங்களையும் அறிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  கட்டண அடிப்படையில் சேனல்களை தேர்வு செய்து கொள்வதற்கான கெடுவை பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க முடியாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. டிடிஎச் மற்றும் கேபிள் சேவை அளிப்பவர்கள் வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்வதற்கான வசதியை இந்த மாத இறுதிக்குள் அளிக்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 40% அதிகமான வாடிக்கையாளர்கள் புதிய முறைக்கு மாறி இருப்பதாகவும் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வாடிக்கையாளர்களிடம் அவர்களின் விருப்பங்களை பெறும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உறுதி அளித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Telecommunications, regulatory, channel, cable TV, trai, operators
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...