×

மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் இரண்டு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: இந்த ஆண்டில் முதல் சாதனை படைத்தது இஸ்ரோ

சென்னை: ராணுவ பயன்பாட்டிற்கு உதவும் மைக்ரோசாட் - ஆர், மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் ஆகிய 2 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் உதவியுடன் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனால், இந்த ஆண்டிற்கான முதல் வெற்றியில் இஸ்ரோ அடிஎடுத்து வைத்தது. இஸ்ேரா சார்பில் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தயார் செய்த 1 கிலோ200 கிராம் அளவு கொண்ட ‘கலாம்  சாட்’ செயற்கைகோள், இஸ்ரோ தயார் செய்த ‘மைக்ரோசாட்- ஆர்’ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி44 ராக்கெட் உதவியுடன் விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்டவுன் நேற்று முன்தினம் இரவு 7.37 மணிக்கு தொடங்கியது.  

திட்டமிட்டபடி, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து இரண்டு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-44 ராக்கெட் நேற்று இரவு 11.37 மணிக்கு இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பூமியில் இருந்த புறப்பட்ட 13 நிமிடம் 30 வினாடிகளில் மைக்ரோசாட் ஆர் செயற்கைகோள் 11.50 மணிக்கு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதைப்போன்று 450  கி.மீட்டர் தொலைவில் ராக்கெட் சென்றவுடன் காலம் சாட் செயற்கைக்கோள் ராக்கெட்டின் நான்காவது நிலையில் ராக்கெட்டுடன் ஒன்றியே செயல்படும். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உடன் இஸ்ரோ தலைவர் சிவன் மற்ற விஞ்ஞனிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுவரை ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் மிக குறைந்த தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் இதுவாகும்.
 
மாணவர்கள் தயார் செய்த கலாம் சாட் செயற்கைக்கோளானது ஹாம் ரேடியோ சேவைக்கும், இஸ்ரோ தயார் செய்த மைக்ரோசாட் - ஆர் செயற்கைக்கோள் ராணுவ பயன்பாட்டிற்கும் உதவும்.   மேலும், பி.எஸ்.எல்.வி சி-44 ராக்கெட் இஸ்ரோ தயார் செய்த 46வது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் 35வது ராக்கெட்  இதுவாகும். பி.எஸ்.எல்.வி-டிஎல் நவீன ரகத்தில் விண்ணில் பாயும் இந்த ஆண்டின்  முதல் ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு குடியரசு தின பரிசு-சிவன்: பிஎஸ்எல்வி சி-44 ராக்கெட் கலாம் சாட் மற்றும் மைக்ரோசாட் ஆர் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு வெற்றிகராமாக விண்ணில் ஏவிய பிறகு இஸ்ரோ தலைவர் சிவன் கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறைந்த சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது இதுவே முதல் முறை. அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதல் இடத்திற்கு கொண்டுவர மாணவர்கள் பணியாற்ற வேண்டும். சந்திராயன் 2 ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும். 2020க்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 2 ராக்கெட்டுக்கள் ஏவப்படும். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு குடியரசு தின பரிசாக சமர்ப்பிக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kalam Chad , Microsoft-R, Kalam Chad, Satellite, PSLV-C 44 Rocket, ISRO
× RELATED மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கை...