×

இந்தியா - நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் மந்தனா, ஜெமீமா அதிரடியால் வெற்றி

நேப்பியர்: முதல் ஒரு நாள் போட்டியில் மந்தனா, ஜெமீமா அதிரடி ஆட்டத்தாலும், பூனம், ஏக்தா வேகத்தாலும் இந்திய பெண்கள் அணி நியூசிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன.  நியூசிலாந்தின் நேப்பியர் நகரில் நேற்று நடைப்பெற்ற முதல் ஒரு நாள்  போட்டியில் டாஸ் வென்ற மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக நியூசிலாந்து அணியின் சூசி பேட்ஸ், ஷோபி டிவைன் ஆகியோர் களமிறங்கினர்.  இந்திய அணியின் வேகம் காரணமாக இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதே நேரத்தில் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் அணியின் ஸ்கோர் 61 ரன்களாக இருந்தபோது  14வது ஓவரில்  ஷோபி ரன் அவுட்டானார். அவர் 38 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து வந்த லாரன் டவுன் 15.2வது ஓவரில் பூனம் யாதவ் பந்து வீச்சில்  தானியா பாட்டியாவிடம் கேட்ச் கொடுத்து  டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்தவர்களில்  ஆமி, அமீலியா, அன்னா ஆகியோர் சுமாரான ரன்கள் எடுத்தனர். ஆனால்  அதிக நேரம் களத்தில் நின்றாலும் இந்திய பந்து வீச்சாளர்களை சமாளித்து ரன் எடுக்க முடியாமல் திணறினர். கூடவே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர். அதனால் நியூசிலாந்து  அணி 48.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  192 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில்  ஏக்தா பிஸ்ட், பூனம் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். தீப்தி சர்மா  2  விக்கெட்களையும்,  ஷிகா பாண்டே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து 193ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ெஜமீமா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், தடுக்க வேண்டிய பந்துகளை தடுத்தும் விளையாடினர். இடைஇடையே பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினர். அதனால் அணியின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. இருவரையும் பிரிக்க நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

அதனால் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி இலக்கை எட்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ப  மந்தனா சர்வதேசப் போட்டியில் தனது 4வது சதத்தை அடித்து அசத்தினார். ஜெமீமாவும் தனது முதல் அரை சதத்தை கடந்தார். ஆனால் வெற்றிப் பெற 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் 33வது ஓவரில் அமீலியா பந்தை பவுண்டரிக்கு விரட்ட முயன்ற மந்தனா தாகூகுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர். ஜெமீமா - மந்தனா இணை 190 ரன்களை குவித்தது. மந்தனா 104 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உட்பட   105 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அந்த ஓவரில் 4 பந்துகள் மிச்சமிருந்தன. அந்த ஓவரின் இறுதியில் எஞ்சிய ரன்களை ஜெமீமா சேர்க்க இந்தியா 33 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அதனால்  இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில்  நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

ஜெமீமா 94 பந்துகளில்  9 பவுண்டரிகளை விளாசி 81 ரன்களுடனும், தீப்தி சர்மா பந்து எதையம் சந்திக்காமலும் களத்தில் இருந்தனர்.  நியூசிலாந்து தரப்பில் அமீலியா கெர் மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஏற்கனவே நேற்று முன்தினம் நடைப்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய ஆண்கள் அணி நியூசிலாந்து ஆண்கள் அணியை 8 விக்கெட்டை வித்தியாசத்தில் அபராமாக வென்றிருந்தது. இப்போது பெணகள் அணியும் 9 விக்கெட் வித்தியாத்தில் அதிரடியாக வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய ஆண்கள் விளையாடும் 2வது ஒருநாள் போட்டி நாளையும், பெண்கள் அணி விளையாடும் 2வது ஒருநாள் போட்டி ஜன.29ம் தேததியும் மவுன்ட் மவுன்கனியில்  நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,New Zealand Women's Cricket Mandana ,Jemima , India, New Zealand, Women Cricket, Mandana, Jemima
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!