×

ஐஎஸ்எல் கால்பந்து இன்று முதல் மீண்டும் தொடக்கம்

சென்னை: ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5வது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 5வது சீசன் செப்.29ம் தேதி தொடங்கியது.  வழக்கமாக ஐஎஸ்எல் போட்டிகள் இடைவெளி ஏதுமில்லாமல் தொடர்ந்து மார்ச் மாதம் வரை நடைபெறும். ஆனால் இந்த முறை இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டி இருந்ததால் 5வது சீசனில் 3 முறை இடைவெளி விடப்பட்டது. காரணம் ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் பலர் இந்திய அணியில் இடம் பெற்றிருந்ததுதான்.

அதனால் அக்.8 முதல் 16ம் தேதி வரை  சீனாவுடன் விளையாடிய போட்டிக்காவும், நவ.12-20 வரை சிரியாவுடன் விளையாடிய ேபாட்டிக்காவும் ஐஎஸ்எல் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட வேண்டி இருந்தால் டிச.17ம் தேதி முதல் 3வது முறையாக ஐஎஸ்எல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. இதுவரை  59 லீக் போட்டிகள் நடந்துள்ளன. இன்னும் 31 போட்டிகள் நடைபெற வேண்டும். ஜன.5ம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை பிப்.1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் ஐஎஸ்எல் போட்டிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

அதனால் மீண்டும் ஐஎஸ்எல்  லீக் போட்டிகளுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி எஞ்சியுள்ள லீக் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. கொச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஏடிகே கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. லீக் போட்டிகள் மார்ச் 3ம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு அரை இறுதிக்கு தகுதிப் பெறும் அணிகளை பொறுத்து போட்டி நடைபெறும் நாள், இடம் அறிவிக்கப்படும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IL , ISL football
× RELATED பெல்கோரோட் பகுதியில் 65 உக்ரைன்...