×

வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் தொழிற்சங்கங்களுக்கு இடையே மோதல்

ஆவடி: பாதுகாப்புத்துறை உற்பத்தியை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், பறிக்கப்பட்ட பென்ஷனை திரும்ப வழங்க கோரியும் நாடு முழுவதும் 4 லட்சம் பாதுகாப்பு துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் இன்று (25ம் தேதி) வரை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு  பகுதியாக, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம், அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம், இந்திய தேசிய டிஃபன்ஸ் தொழிலாளர்கள் சம்மேளனம், பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கம், அண்ணா தொழிலாளர்கள் சங்கத்தை சார்ந்த போராட்ட குழு சார்பாக ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலையின் (ஒ.சி.எப்) முன்பு கடந்த இரு நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஒ.சி.எப் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை (தொமுச) சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் பங்கேற்காமல் வேலைக்கு சென்றனர். நேற்று காலை தொமுச தொழிலாளர்கள் ஒசிஎப் கம்பெனிக்குள் வேலைக்கு செல்ல வந்தனர். அவர்களை வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், தொமுசவை சேர்ந்த தொழிலாளர்கள் கம்பெனிக்குள் நுழையவும் மற்ற சங்கத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொமுச தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆவடி, சிடிஎச் சாலை-ஒசிஎப் சாலை சந்திப்பிற்கு ஊர்வலமாக திரண்டு வந்தனர்.

பின்னர், நிர்வாகிகள் வேலுசுவாமி, முகம்மது மீரா தலைமையில் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஜெய்கிருஷ்ணன், பொற்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், போலீசார் மறியல் செய்த தொமுச நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் கூறுகையில், தொமுச சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலாசீத்தாராமனை கடந்த டிசம்பர் 20ந்தேதி சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்து உள்ளோம். அவரும், பாதுகாப்பு துறை நிறுவனங்களை பார்வையிட்டு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக வாக்குறுதி கொடுத்து உள்ளார்.

    இதன் காரணமாக, மத்தியரசுக்கு  நாங்கள் கால அவகாசம் கொடுத்து உள்ளோம். இதனால் நாங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எங்களை மற்ற தொழிற்சங்கத்தினர் தடுத்து வருகின்றனர். எங்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தை தொடருவோம் என போலீசாரிடம் கூறினர். இதனை அடுத்து, போலீசார் அவர்களை சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். பின்னர், போலீசார் தொமுச சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பாக ஒசிஎப் கம்பெனிக்கு பணிக்கு அழைத்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Confrontation ,unions ,strike , Strike, unions, conflict
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...