×

கொடநாடு கொலை வழக்கில் சயான் ஜாமீனை ரத்து செய்ய முடியாது : 29ம் தேதி ஆஜராக ஊட்டி கோர்ட் அவகாசம்

ஊட்டி: ெகாடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவை ஊட்டி கோர்ட் ரத்து செய்ய மறுத்து அவர்கள் வரும் 29ம் தேதி நேரில் ஆஜராக அவகாசம் அளித்த உத்தரவிட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017ம் தேதி காவலாளியை கொலை செய்துவிட்டு 11 பேர் கொண்ட கும்பல் சில ஆவணங்களை எடுத்துச் சென்றது. இவர்களில் முதல் குற்றவாளியான  சேலத்தை சேர்ந்த கனகராஜ், சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கில், தொடர்புடைய மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில், தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் அளித்த பேட்டியில், கொடநாடு வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறினர். இதையடுத்து, இருவரையும் தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர், அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். இதற்கிடையே, சயான் மற்றும் மனோஜின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் பாலநந்தகுமார் ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வடமலை நேற்று இருவரும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி கோர்ட் உத்தரவு நேற்று முன்தினம் கிடைக்காததால் இருவரும் ஆஜராக முடியவில்லை, எனவே அவகாசம் வழங்க வேண்டும் என மனு அளித்தார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் பாலநந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வடமலை, இருவரும் ஜன.29ம் தேதி கோர்ட்டில் ேநரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதொடர்பான பதில் மனுவையும் அன்றைய தினமே தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதேசமயம் அவர்களின் ஜாமீனை ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Citadel , Kodadan murder, robbery, cyan bail
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி