×

அபாயகரமான கதிர்வீச்சை வெளியேற்றும் பழைய இரும்பு கடையில் சிஎஸ்-137 கருவி கண்டுபிடிப்பு: பலத்த பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்...ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமானது

திருமலை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் அபாயகரமான கதிர்வீச்சை வெளியேற்றும் சிஎஸ் 137 கருவியை பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், அதை பலத்த  பாதுகாப்புடன் அங்கிருந்து எடுத்துச்சென்றனர். ஆந்திராவின் ராஜ மகேந்திரவரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆழ்கடலில் எண்ணெய் வளம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக சிஎஸ்-137 என்ற கருவி  பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் கதிர்வீச்சு வெளியேற்றக் கூடிய இந்த  கருவி மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகிறது. இந்த கருவியை தவறாக பயன்படுத்தினால் ஆல்பா, காமா, பீட்டா என்னும் கதிர்கள் வெளியேறி  தண்ணீரிலும் காற்றிலும் கலந்தால் 100 நாட்களில் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருவியில் உள்ள ரசாயனம்  யுரேனியத்தில்    தயாரிக்கப்படுகிறதாம்.  

இதனை வைத்துக் கொள்வதற்கு மத்திய அரசின் அணுசக்தி கவுன்சில் அனுமதியும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம். இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தில்  வைக்கப்பட்டிருந்த சிஎஸ்-137 கருவி கடந்த 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளது. இதனை கண்டுபிடிப்பதற்காக அதிகாரிகள் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 16ம் தேதி பொம்முறு காவல்  நிலையத்தில் ஒஎன்ஜிசி அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் ரகசியமாக 5 குழுக்கள் அமைத்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையுடன் இணைந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், காணாமல் போன சிஎஸ்  137 என்ற கருவி கிருஷ்ணா மாவட்டம், களிதண்டியில் உள்ள ஒரு பழைய இரும்பு சாமான் விற்பனைக் கடையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினருடன்  சென்று  அப்பகுதியில் உள்ளவர்களை காலி செய்து அந்த கருவியை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து  ராஜமகேந்திரவரம்  எஸ்பி சேமிஷா பாஜ்பாய் கூறுகையில், `‘அபாயகரமான சிஎஸ்-137 கருவி ஒரு பழைய இரும்பு சாமான்  கடையில் கிடைத்துள்ளது. இந்த கருவி ஓஎன்ஜிசிக்கு பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன்  கூடிய வாகனத்தில் கொண்டு செல்லப்படும். அந்த கருவி எந்த சேதமும் ஏற்படாமல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கருவி எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.  இரும்பு கடையில் ஏதோ ஒரு இரும்பு  பொருள் என நினைத்து அதனை உடைத்திருந்தால் அதில் இருந்து  வெளியேறும் கதீர்வீச்சு பேராபத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அதற்கு முன்பே  அதனை போலீசார்  கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ONGC , Radiation, old iron shop, CS-137 tool, ONGC company
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...