×

எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி : எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புதிதாக செய்யப்பட்ட திருத்தங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. எஸ்சி, எஸ்டி வன்முறை தடுப்புச் சட்டத்தில் உள்ள சில கடுமையான  பிரிவுகள் அரசு ஊழியர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்தாண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை  தடுப்பு சட்டப்பிரிவில் இருந்த உடனடி கைது பிரிவை நீக்கியது. இதற்கு எஸ்டி, எஸ்டி அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எஸ்சி, எஸ்டி சட்டத்தை மத்திய அரசு நீர்த்துபோக செய்துவிட்டதாக  குற்றம்சாட்டின.  இதனால் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நிறைவேற்றியது.

இந்த புதிய திருத்தத்தின்படி எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் மீது புகார் செய்யப்பட்டால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய  முன் விசாரணை தேவையில்லை, கைது செய்ய அனுமதி பெற தேவையில்லை, அவர் எந்த  நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெற முடியாது. இந்த புதிய திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ‘‘எஸ்சி, எஸ்டி சட்டத்தில் புதிய திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்தின்  இரு அவைகளும் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளன. இதன் மூலம் அப்பாவிகள் முன்ஜாமீன் உரிமையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ என  கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய திருத்தங்களுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த மனுக்களும், கடந்த மார்ச்  மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்து மனுவும் மொத்தமாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்குகளை விசாரிக்க, ஏற்கனவே இந்த  வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி யு.யு.லலித் அடங்கிய புதிய அமர்வை மாற்றியமைக்கும்படி தலைமை நீதிபதிக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி பரிந்துரைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SC ,Supreme Court ,SD , SC, SD Law Correction, Supreme Court
× RELATED உச்சநீதிமன்ற தீர்ப்பின்...