×

2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு...ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் : மாநாடு வெற்றி பெற்றதாக அறிவிப்பு

சென்னை: சென்னையில் நடைபெற்ற 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ₹3 லட்சத்து 431 ேகாடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன என்றும், அதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், மாநாடு முழு வெற்றி பெற்றுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தில் 2வது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று காலை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  முன்னிலை வகித்தார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில்  உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் 250 அரங்குகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து, முதல் நாள் முதலீட்டாளர் மாநாடு நிறைவு பெற்றது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2வது மற்றும் நிறைவு நாளான நேற்று மாலை 3 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) ரூ.27,400 கோடி, அதானி நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி, எம்ஆர்எப் ரூ.3,100 கோடி, என்எல்சி ரூ.23,800 கோடி, ஹூண்டாய் ரூ.7000 கோடி (நிறுவன விரிவாக்கம்), சாய் பல்கலைக்கழகம் ரூ.580 கோடி, அலையான்ஸ் நிறுவனம் ₹9,488 கோடி, ஏசர் ₹1500 கோடி, பிஎஸ்ஏ நிறுவனம் ₹1,250 கோடி மற்றும் 12,000 சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் சார்பில் ₹30 ஆயிரம் கோடி என மொத்தம்₹1,14,118 கோடிக்கான முதலீடுகள் மேடையிலேயே கையெழுத்தானது.

இதை தொடர்ந்து, சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு பங்கேற்ற மாநாட்டின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்புரையாற்றி பேசுகையில், ‘‘2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி ெபற்றுள்ளது’’ என்று அறிவித்தார்.தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு திட்டம் 2023ஐ இந்த அரசு செயல்படுத்தி வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று முடிந்த 2 வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  

இந்த மாநாட்டின் மூலம் ₹3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுமார் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த மாநாடு வெற்றி பெறுவதற்காக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தனர். இதற்கு நல்ல வெற்றி கிடைத்துள்ளது. இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்த அனைத்து அரசு அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், மாநாட்டுக்காக உழைத்த அனைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 3வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2021ம் ஆண்டு நடைபெறும்.  இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு பேசுகையில், ‘‘தமிழ்நாடு மிக அழகான மாநிலம். தமிழும், தமிழ்நாடும் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பயனளிக்கும் என்று உலகத்துக்கு உறுதி கூறுகிறேன். இந்த மாநாட்டில் ₹3லட்சம் கோடி அளவுக்கு முதலீடு உறுதியானது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார். இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கய நாயுடுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைவு பரிசு வழங்கினார். மாநாடு முடிவில், கூடுதல் தலைமை செயலாளர் ஞானதேசிகன் நன்றி கூறினார். மாலை 5 மணிக்கு 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நாட்டு பண்ணுடன் நிறைவடைந்தது.இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்தியாவில் இருந்தும் பல்வேறு முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Investors Conference ,Announcement , Global Investors Conference, Investments, Success
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...