×

பிரியங்காவின் அரசியல் வருகையால் பாஜ தலைவர்களுக்கு அச்சம் : திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: பிரியங்காவின் அரசியல் வருகை பாஜ தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார். பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், தமாகாவை சேர்ந்த பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நல்லமுத்து மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் ஓய்வு பெற்ற முதன்மை வருமான வரி ஆணையர் கணேசன், ஐஓபி தொழிற்சங்க தலைவர் ராமசாமி,  மற்றும் பல்வேறு துறைகளின் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், தாமோதரன், சிரஞ்சீவி, வக்கீல் சுதா, நவீன், எஸ்.கே.நவாஸ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து, திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:பொதுவாக இந்த அரசு பிரச்னைகள் வரும் போது தீர்வு காணாமல் அச்சுறுத்துவது, வழக்கு தொடர்வது, கைது செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து தீர்வு காண வேண்டும்.பார்ப்பதற்கு இந்திராகாந்தி போன்று இருப்பதால் பிரியங்கா காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை நிறைவேற்றி உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதுடன், பிரியங்கா காந்திக்கு அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரியங்கா அரசியலுக்கு வருவதைக் கண்டு பிரதமர் மோடி முதல் அமித்ஷா வரை பாஜ தலைவர்கள் பயப்படுகின்றனர். அச்சத்தின் உச்சத்தில் பிரியங்காவை அவர்கள் விமர்சனம் செய்கின்றனர். இவர்கள் வெடிகுண்டு கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள் என்று சொன்னால், மகாத்மா காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ்., பாஜவை சேர்ந்த எச்.ராஜா மட்டும் தான் காந்தியின் வாரிசா? இது போன்ற விமர்சனங்களை எச்.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழிசை சவுந்தரராஜன் பிரியங்காவின் வருகையை கண்டு பயப்படவில்லை என்றால் எதற்காக பிரியங்கா வரக்கூடாது என்று கூறுகிறார்கள். அது பயத்தின் வெளிப்பாடு தானே. பிரியங்கா காந்தி வருவதற்கு முன்பே பாஜவுக்கு பின்னடைவு தான். எனவே, பாஜ வீழ்ச்சி என்பது உறுதி. மோடி அகற்றப்படுவது உறுதி. அதற்கு பிரியங்கா காந்தி, ராகுல்காந்திக்கு துணை நிற்பார்.  இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Priyanka ,visit ,leaders ,interview ,BJP ,Thirunavukkar , Priyanka, political visit, the Thirunavukkarar, Congress
× RELATED பரபரப்பாக தேர்தல் முடிவுகள்...