×

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக சிக்கிய துணை ஆணையருக்கு பதவி உயர்வு - வணிகவரித்துறையில் பரபரப்பு

சென்னை:தமிழகத்தில் பான் மசலா, குட்கா விற்பனை செய்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தடையை மீறி குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் சில குட்கா தயாரிப்பு தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது, குட்கா தயாரிப்பு பங்குதாரர் ஒருவர் வீட்டில் டைரி ஒன்று சிக்கியது. இதில், கடந்த 2015,2016ம் ஆண்டில் எந்தெந்த உயர் அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என்ற விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வருமானவரித்துறை அதிகாரிகள் கணக்கிட்ட போது, 2 ஆண்டுகளில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ₹39 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த டைரியில் இடம் பெற்றிருந்த பெயரின் அடிப்படையில் 17 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அந்த டைரியில் இடம் பெற்றிருந்த அமைச்சர், முன்னாள் அமைச்சர், டிஜிபி, வணிக வரித்துறை அதிகாரி  உள்ளிட்டவர்களின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில், வணிக வரித்துறை துணை ஆணையர் ஒருவர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிபிஐ குட்கா விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பொதுவாக அதிகாரி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து இருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், குட்கா விவகாரம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாக சிக்கிய வணிகவரித்துறை துணை ஆணையருக்கு இணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி வணிக வரித்துறை செயலாளர் பாலச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவருக்கு சென்னையில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் நேற்று இரவோடு, இரவாக பொறுப்பேற்று கொண்டார். குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கி இருப்பது வணிகவரித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deputy commissioner ,Gudka , Ban Masala, Gudka Sales, Commercial Taxes, Promotion
× RELATED மது கடைகளை மூட உத்தரவு