×

சிபிஐ இடக்கால இயக்குநர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சிக்ரி விலகல்

புதுடெல்லி : சிபிஐ இடக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி சிக்ரி விலகியுள்ளார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அலோக் வர்மாவுக்கு பதிலாக தற்காலிகமாக இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அலோக் வர்மா பணியை தொடரலாம் என உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவானது அலோக் வர்மாவை நீக்கிவிட்டு மீண்டும் நாகேஸ்வரராவை நியமித்தது. இதை எதிர்த்து தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நாகேஸ்வரராவின் நியமனம் சட்ட விரோதமானது என்றும், சிபிஐ அமைப்பை ஏற்படுத்திய டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப்பிரிவின் விதிகளை நாகேஸ்வர ராவ் நியனம் மீறுகிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் சிபிஐ இயக்குநர் தேர்வு குழுவில் இருப்பதால் தன்னால் விசாரணை நடத்த முடியாது என கூறி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிமன்ற அமர்வில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விலகினார்.

இதைனை தொடர்ந்து அவருக்கு பதிலாக நீதிபதி ஏ.கே.சிக்ரி இந்த வழக்கை விசாரிப்பார் என கூறப்பட்டது. இந்நிலையில் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து சிக்ரியும் விலகியுள்ளார். முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை நீக்குவதற்கான தேர்வு குழு ஆலோசனை கூட்டத்தில் அலோக் வர்மாவை நீக்க வேண்டும் என சிக்ரி வாக்களித்திருந்தார். இதையடுத்து அவருக்கு லண்டனை தலைமையிடமாகக் கொண்ட காமன்வெல்த் தீர்ப்பாய அமைப்பின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக சிக்ரிக்கு இத்தகைய பெரும் பதவி வழங்கியதாக விவாதம் நடைபெற்ற நிலையில் அப்பதவியை ஏற்க சிக்ரி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sikri ,CBI , CBI Director, Alok Verma, Nageswara Rao, Justice Sikri
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிஐ...