×

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் : மாடு முட்டி 57 பேர் காயம்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் 48ம் ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஊர் கவுண்டர் வி.சிகாமணி தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட சப் கலெக்டர் (முத்திரை கட்டணம்) தினகரன், தாசில்தார் குமார் ஆகியோர் உறுதிமொழி வாசித்து விழாவை துவக்கி வைத்தனர். இதில் ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 278 காளைகள் கலந்து கொண்டு ஓடின. இதில் குறிப்பிட்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடந்த திருப்பத்தூர் அடுத்த வடுகமுத்தம்பட்டி காளைக்கு முதல் பரிசாக 50 ஆயிரமும், கிருஷ்ணகிரி மாவட்டம், வரட்டனப்பள்ளி காளைக்கு 2வது பரிசாக 40 ஆயிரமும் சப்கலெக்டர் தினகரன் வழங்கினார்.  

தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி பெற்ற 25 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சப்கலெக்டர் பிரியங்கா பங்கஜம், டிஎஸ்பி ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் காளைகளை தடுத்த இளைஞர்கள் 25 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்களுக்கு முகாமில் இருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆம்பூர் தாலுகா ஒடுகத்தூர் அடுத்த பாக்கம்பாளையம் கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா, தாசில்தார் சுஜாதா ஆகியோர் கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனர்.

இதில் அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து 247 காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். விழா மதியம் 1 மணியளவில் முடிக்கப்பட்டது. இதில், அதிவேகமாக ஓடி குறிப்பிட்ட தூரத்தை முதலில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 45ஆயிரம் ரொக்கம் உட்பட மொத்தம் 34 பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாடுமுட்டியது, தவறி விழுந்து உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டன. மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை டாக்டர்கள், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bullshit festival ,Jolarpet , Jolarpet, ox, bulls
× RELATED ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத...