ஆஸி. ஓபன் டென்னிஸ் செரீனாவை வீழ்த்தினார் பிளிஸ்கோவா: ஜோகோவிச் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரை இறுதியில் விளையாட செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். கால் இறுதியில் அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் (16வது ரேங்க்) நேற்று மோதிய பிளிஸ்கோவா (7வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த செரீனா 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் அதிரடியாக விளையாடிய செரீனா 5-1 என முன்னிலை பெற்றதுடன் மேட்ச் பாயின்ட் வரை சென்ற நிலையில், மிகுந்த உறுதியுடன் போராடிய பிளிஸ்கோவா தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறினார்.

ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்த விறுவிறுப்பான இப்போட்டியில் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் 2 மணி, 10 நிமிடம் போராடி வென்ற பிளிஸ்கோவா அரை இறுதிக்கு முன்னேறினார். ஆஸி. ஓபனில் அவர் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு மிக அருகே நெருங்கிய நிலையில், செரீனா கால் வழுக்கி கீழே விழுந்தாலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து விளையாடி பார்வையாளர்களின் பாராட்டுகளை அள்ளினார். போட்டி முடிந்ததும் இது குறித்து கூறுகையில், ‘கணுக்காலில் வலி எதுவும் இல்லை. சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால், பிளிஸ்கோவா இப்படி அதிரடியாக விளையாடி வெற்றி பெறுவார் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

மற்றொரு கால் இறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) எளிதாக வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நிஷிகோரி விலகல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய கெய் நிஷிகோரி (ஜப்பான்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.  இரண்டாவது செட்டிலும் 1-4 என பின்தங்கிய அவர் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் அவதிப்பட்டார். களத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகும் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததால் போட்டியில் இருந்து நிஷிகோரி விலகினார். இதைத் தொடர்ந்து ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.

நிஷிகோரி முதல் 4 சுற்று போட்டியிலும் மிகக் கடுமையாகப் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றில் 3 போட்டிகள் 5 செட் போராட்டமாக அமைந்ததுடன், கடைசியாக கரினோ புஸ்டாவுக்கு எதிராக 5 மணி, 5 நிமிடத்துக்கு மாரத்தான் போராட்டத்தை நிகழ்த்தி இருந்தார். கால் இறுதிக்கு முன்பாகவே 13 மணி, 47 நிமிடம் களத்தில் இருந்தது நிஷிகோரியின் உடல்தகுதியை வெகுவாகப் பாதித்துவிட்டது. மற்றொரு கால் இறுதியில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லி 7-6 (7-4), 6-3, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரயோனிச்சை (கனடா) வீழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>