×

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5,000 ரன்கள் கடந்த 2-வது இந்தியர்: ஷிகர் தவான் சாதனை

நேப்பியர்: இந்திய வீரர் ஷிகர் தவான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். நியூசிலாந்துக்கு எதிராக நேப்பியரில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் தனது 118-வது இன்னிங்ஸ்-ல் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் இந்திய வீரர்களில் அதிவேகமாக 5,000 ரன்கள் கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை தவான் பெற்றார். இந்திய கேப்டன் விராட் கோலி 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எட்டி முதலிடம் வகிக்கிறார். முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி 124 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் மைல்கல்லை எட்டியிருந்தார், தற்போது தவான் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் உலக அளவில் மேற்கிந்திய வீரர் பிரையன் லாரா 118 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை கடந்துள்ளார். அவரது சாதனையை தற்போது தவான் சமன் செய்துள்ளார். உலக அளவில் அதிவேகமாக 5,000 ரன்களை 101 இன்னிங்ஸ்களில் கடந்து தென் ஆப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா முதலிடம் வகிக்கிறார். மேற்கிந்திய ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எட்டி 2-ம் இடத்தில் உள்ளனர். லாரா, தவான் இருவரும் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக முகமது ஷமி குறைந்த போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார். தற்போது தவானும் சாதனை படைத்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shikhar Dhawan , fastest,Indian,ODIs,Shikhar Dhawan,Record,NZvIND
× RELATED மனைவியுடன் விவாகரத்து பெற்றதால் மகனை...