×

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா? : நீதிமன்றம் கேள்வி

மதுரை : திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா? என்று இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து  செய்து உத்தரவு

முன்னாள் முதல்வர் கலைஞர் மறைவையடுத்து திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் திருவாரூர் தொகுதியில் மட்டும் இடைத்தேர்தல் அறிவித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருவாரூர் இடைத்தேர்தலை கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகிறது, அவை முடிய 3 மாத காலம் ஆகும். ஆகையால் திருவாரூர் உட்பட 19 தொகுதிகளுக்கும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அதனை கருத்தில் கொண்டும், திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என பெரும்பாலான அரசியல் காட்சிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்ததாக தேர்தலை ஆணையம் விளக்கம் அளித்தது.

இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடைகோரிய வழக்கு


இந்நிலையில் திருமங்கலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்துசெய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை என திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் ரத்து செய்ய மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெறவில்லை எனவும் மனுதாரர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு, ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்யும் முன் மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியதா என்று கேள்வி எழுப்பியது. இதையடுத்து கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாக கட்சி தலைவர்கள் கூறியதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இந்த வழக்கு தொடர்பான பதில் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 30ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,cancellation ,Central Government ,bye ,Tiruvarur , By-election, Tiruvarur, Madurai branch, Question,Election Commission
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...