×

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி வரை உறைபனி நீடிக்கும் - விஞ்ஞானி தகவல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அடுத்தமாதம் வரை உறை பனியின் தாக்கம் இருக்கும் என்றும், அதன்பின் படிப்படியாக குறையும் என நீர்வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் இறுதி முதல் நீர்பனி விழத்துவங்கும். இது ஒரு மாதம் நீடிக்கும். தொடர்ந்து அக்டோபர் மாதம் இறுதி வாரத்திற்கு மேல் துவங்கும் உறைப்பனி பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும். ஆனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நாள்தோறும் உறைப்பனி கொட்டி வருவதால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் விரித்தார்போல் காட்சியளிக்கிறது.  இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உறைப்பனியின் தாக்கம் இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும். அதன்பின்னரே படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி மணிவண்ணன் தெரிவித்தார். இதுபற்றி நேற்று அவர் கூறும்போது, `நீலகிரி மாவட்டத்தில் இம்முறையின் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே கூறி வந்தோம். அதேபோல், உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த உறைப்பனி பொழிவு பிப்ரவரி மாதம் இறுதி வரை நீடிக்கும். இதனால் தேயிலை தோட்டங்கள், மலை காய்கறிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. விவசாயிகள் தங்களது பயிர்களை தண்ணீர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக வெப்பநிலை 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் மைனஸ் 2 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Frost ,district - scientist ,Nilgiris , Nilgiris district, freezing, scientist information
× RELATED நீலகிரியில் கடும் உறைபனி: குளிரால் பொதுமக்கள் அவதி