பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம்: விளம்பரத்திற்கு மட்டும் 56% நிதி செலவு

டெல்லி: பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், விளம்பரத்திற்கு மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாலினம் கண்டறிந்து கருச்சிதைவு செய்வதை  தடுத்தல், பெண் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்பு, பாதுகாப்பது மற்றும் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டமாக பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டத்தை மத்திய அரசு  தொடங்கியது. இத்திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் அரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார் ஜனவரி 4-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த தகவலில், பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க  வைப்போம் திட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.364.66 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கு இத்திட்டத்திற்காக ரூ.280 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.155.71 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் 70.63 கோடி ரூபாய் மட்டும் மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும்  அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.53.66 கோடி அல்லது 19 சதவீத நிதி இன்னும் ஒதுக்கீடே செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.200 கோடி நிதியில் ரூ. 135.71 கோடி அல்லது  68% நிதி விளம்பரங்களுக்காகவே செலவிடப்பட்டது.  2014-15-ம் ஆண்டில் ரூ.18.91 கோடிகளும், 2015-16-ம் ஆண்டில் ரூ.24.54 கோடிகளும், 2016-17-ம் ஆண்டில் ரூ.29.79 கோடிகளும் விளம்பரத்துக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சுற்றுலா விளம்பர போர்டில் தெளிவில்லாத ஊர்களின் பெயர்கள்