×

ஆரல்வாய்மொழியில் தரமற்ற முறையில் கழிவு நீரை தேக்கி கட்டப்படும் பாலம்

ஆரல்வாய்மொழி: நாகர்கோவில் - காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் பழைய பாலத்தினை உடைத்து புதிய பாலம் போடுகின்ற பணி நடைபெற்று வருகிறது. ஆரல்வாய்மொழி சந்திப்பில் உள்ள பொய்கை  அணையிலும் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணி  நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாலம் பணி தொடங்குவதற்கு முன்பு  இந்த ஒடையில் வரும் கழிவு தண்ணீரை திருப்பி விடாததால், தற்போது பாலத்திற்காக தோண்டப்பட்ட சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றி அங்கு கம்பி கட்டி காங்கிரீட் போடப்பட்டது. காங்கிரீட் போட்ட அன்றே மீண்டும் 20 அடி ஆழத்திற்கும் கழிவு நீர் தேங்கியது. இதனால் காங்கிரீட் மேல் பகுதியில் நீட்டி  விடப்பட்ட கம்பி முழுவதும் கழிவு நீரில் மூழ்கியது. பின்னர் சில நாட்கள் அப்படியே விடப்பட்டது. நேற்று மீண்டும் கழிவு நீர் வெளியேற்றப்பட்டு பின்னர் காங்கிரீட் போடப்பட்டது. கழிவு தண்ணீர் மட்டும் அகற்றப்பட்ட நிலையில்  கழிவு பொருட்கள், சக்தியா உள்ளிட்டவை அப்படியே விடப்பட்டு அதன் மேலேயே காங்கிரீட் போடப்படுகிறது.

மேலும் காங்கிரீட்டுக்கு பயன்படுத்தப்படுகின்ற கம்பியும் மிக சிறிய அளவில் உள்ளதால் இந்த பாலம் பலவீனமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த பணியை கண்காணிக்கும் அதிகாரிகள் எந்த நடவடிக்காமல்  உள்ளனர். இப்பாலம் நாகர்கோவில்-காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்களும், அதிக பொதுமக்களும் பயன்படுத்தும் மிகவும் முக்கியமான சாலையில் அமைக்கப்படுகிறது. முக்கியத்துவம்  வாய்ந்த இந்த பாலம் தரம் குறைவாக, பாதுகாப்பற்ற நிலையில் கட்டப்படுவதால் இதனால் பேராபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே சம்மந்தபட்ட உயர் அதிகாரிகள் ஆரல்வாய்மொழியில் கட்டப்படும் பாலத்தை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Non-standard, waste water, bridge
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்