×

டீலக்ஸ், பிரிமியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மூலம் அரசு பஸ்களில் கட்டண கொள்ளை

வேலூர்: தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 70 சதவீதம் ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படுகிறது என்ற புகார் உள்ளது. இவ்வாறு ஓட்டை, உடைசலான பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், கடந்தாண்டு பஸ் டிக்கெட் விலை பல மடங்காக அரசு உயர்த்தியது. இதைத்தொடர்ந்து தற்போது ஓரளவு புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 700 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, ஆரணி, ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகள், தொலைதூரம் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பஸ்சில் செல்ல 2.15 மணி நேரமாகும். பயண நேரத்தை குறைத்து விரைவாக பயணிகள் செல்வதற்காக ‘வழிநில்லா பேருந்து, சூப்பர் பாஸ்ட், எல்எஸ்எஸ், 1 டூ 5, டீலக்ஸ், அல்டரா டீலக்ஸ், விரைவு’  பஸ்கள் என இயக்கப்படுகிறது. சமீபகாலமாக டீலக்ஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய பஸ்கள் அதிகளவு இயக்கப்படுகிறது. ஆனால் சாதாரண பஸ்கள் செல்லும் நேரத்தில்தான் இந்த பஸ்கள் செல்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

டீலக்ஸ் என்ற பெயரில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களில் எவ்வித கூடுதல் வசதிகளும் இல்லை. பெரும்பாலான அரசு பஸ்களில் இருக்கை, ஜன்னல் உடைந்தும், மழை வந்தால் பஸ்சிற்குள் மழைநீர் ஒழுகும் நிலைதான் உள்ளது. அதிக கட்டணம் செலுத்தியும், ஓட்டை உடைசலான பஸ்களில் செல்ல பயணிகள் விரும்பாமல் சொகுசு பஸ்கள் போல், உரிய கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எனவே அரசு போக்குவரத்து கழகத்தில் ஆயுட்காலம் முடிந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் சரி செய்ய வேண்டும். எல்லா அரசு பஸ்களிலும் உரிய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Deluxe , Deluxe, premium, government bus, charge robbery
× RELATED இளையான்குடி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் தேவை