அரசு ஆசிரியர்களின் போராட்டங்களால் சேலத்தில் எந்த பாதிப்பும் இல்லை: ஆட்சியர் ரோகினி பேட்டி

சேலம்: அரசு ஆசிரியர்களின் போராட்டங்களால் சேலம் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை என மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 1.4.2003ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தமிழக பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர் களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் துறையை சேர்ந்த கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராடி வந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 2017 செப்டம்பர் மாதம் தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்டனர்.  இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை களையவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தும், அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தெளிவான அறிவிப்பு எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால், ஜாக்டோ-ஜியோ இந்த பிரச்னை குறித்து நடைபெற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.

இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜனவரி 22ம் தேதி (இன்று) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் போராட்டத்தை தடுக்கும் முயற்சியாக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஒரு அரசாணை  வெளியிட்டார். அதில், ‘‘வேலைக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு  ஊதியம் வழங்கப்பட மாட்டாது. மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு  ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது’’ என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் இன்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் 56 ஆசிரியர் சங்கங்கள், 200க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் ரோகினி, ஆசிரியர்களின் போராட்டத்தினால் சேலம் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>