×

புதிய வரலாறு படைத்த 'கிங்'கோலி: ஒரே ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளை பெற்று சாதனை

துபாய்: 2018-ம் ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராகவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என ஐசிசி இன்று அறிவித்தது. இதன்மூலம் ஒரே ஆண்டில் ஐசிசியின் 3  விருதுகளையும் பெற்ற முதல் பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி. தொடர்ந்து 2-வது ஆண்டாக சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதை விராட் கோலி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ஐசிசி அறிவித்த டெஸ்ட், ஒருநாள் அணிக்கு கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். இதனைதொடர்ந்து ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர், மற்றும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராகவும் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு விராட் கோலி 13 டெஸ்ட் போட்டிகளில், 5 சதங்கள் உட்பட 1,322 ரன்கள் விளாசியுள்ளார். 2018-ல் டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 55.08 ஆகும்.

14 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர் 6 சதங்கள் உட்பட 1,202 ரன்கள் எடுத்துள்ளார். 2018-ல் ஒருநாள் போட்டியில் அவரது சராசரி 133.55. மேலும் ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி முதல் இடம் வகிக்கிறார். மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 2-ம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் சிறந்த வீரருக்கான விருதிற்கு விராட் கோலிக்கும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் பெரும்பாலானவர்கள் கோலியை தேர்வு செய்துள்ளனர். இதனால் ரபாடா 2-வது இடத்தை பிடித்தார். டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை விராட் கோலி பெறுவது இதுவே முதல்முறையாகும். மேலும் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரராக கோலியும், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : history,King,Kohli,Achieved,ICC,Awards,one year
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...