வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு புதுநெல் வருகை : ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்ட தலம். வேதங்களால் பூஜை செய்யப்பட்டு முடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்மந்தரும், தேவாரம் பாடி கதவு திறந்த வரலாற்று சிறப்பு மிக்க தலம். இக்கோயிலுக்கு 10ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா குன்னலூர் கிராமத்தில் 1500 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் குத்தகை மூலம் கோயிலுக்கு வரும் நெல்லை கொண்டுதான் தினசரி நெய்வேத்தியம் நடைபெறுகிறது. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி நேற்று குன்னலூரில் இருந்து அறுவடை செய்யப்பட்ட முதல் நெல்லை நெல்கோட்டையாக கட்டி வேதாரண்யம் கொண்டு வந்தனர்.

கோட்டை நெல்லை வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சியம் செல்வ விநாயகர் கோயிலில் வைத்து பூஜை செய்து மேள தாளங்கள் முழங்க நெல்கோட்டைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருமணக்கோலத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதியில் வைத்து சிறப்பு தீபாராதணை நடைபெற்றது. பின்னர் அதில் உள்ள நெல்கதிர்களை யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாதபண்டார சன்னதி பக்தர்களுக்கு வினியோகம் செய்தார். மாலை இரண்டாம் காலத்தில் இந்த நெல்லை அரிசியாக்கி நெய்வேத்தியம் செய்து வேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு நிவேத்தியம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வீரபாண்டி செழியன் நினைவுநாள் ஊர்வலம்