×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால் இறுதியில் பிளிஸ்கோவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி  ஒரு மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப்புடன் (ரோமானியா) மோதிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (16வது ரேங்க்) 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஹாலெப் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் ஹாலெப்பின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த செரீனா 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி, 47 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆஸி. ஓபனில் செரீனா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் பிளிஸ்கோவா - செரீனா மோதுகின்றனர். ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தனது 4வது சுற்றில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அனஸ்டேசியா செவஸ்டோவாவை (லாட்வியா) வீழ்த்தினார். அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் மோதிய எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஜோகோவிச் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6-4, 6-7 (5-7), 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டானில் மெட்வதேவை (ரஷ்யா) வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (4வது ரேங்க்) 1-6, 1-6, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் கனடா வீரர் மிலோஸ் ரயோனிச்சிடம் (16வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டார். தனது மோசமான ஆட்டத்தால் விரக்தி அடைந்த ஸ்வெரவ் டென்னிஸ் மட்டையை தரையில் ஓங்கி அடித்து உடைத்து நொறுக்கினார்.

மாரத்தான் போராட்டம்: ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி - கரினோ புஸ்டா (ஸ்பெயின்) இடையே நடந்த 4வது சுற்று போட்டி 5 செட்களுக்கு இழுபறியாக நீடித்து ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்தது.  5 மணி, 5 நிமிட நேரத்துக்கு நீடித்து மாரத்தான் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் நிஷிகோரி 6-7 (8-10), 4-6, 7-6 (7-4), 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். நடப்பு தொடரில் 4 போட்டியில் விளையாடி உள்ள நிஷிகோரி மூன்றில் 5 செட் போராட்டத்துக்கு பின்னரே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் வீரர் லூகாஸ் பவுல்லியும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australian Open , Australian Open,quarter-final,pliskova
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...