×

சொன்னதை செய்தாரா உங்கள் (நீலகிரி) எம்.பி கோபாலகிருஷ்ணன்...?

இசையோடு சேராத பாட்டு - இன்பமில்லை. பகுத்தறிவு இல்லாத பார்வை-பயனில்லை. சொல் ஒன்று; செயல் வேறு- இது, நாட்டுக்கும் கேடு; வீட்டுக்கும் கேடு. இதில், உங்கள் தொகுதி எம்பி. எப்படி? 2014 தேர்தலில் சொன்னதை செய்தாரா? தொகுதியை கவனித்தாரா? வளமாக்கினாரா?அல்லது தன்னை வளமாக்கினாரா? இதை பற்றி அலசுவதுதான் இந்த பகுதி. காரணம், மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே பாக்கி. அதில், உங்கள் தொகுதியின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கப் போகும் சக்தி நீங்கள்தான். ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!’ இனி, முடிவு உங்கள் கையில்!

சுய விவரம்
பெயர்    சி.கோபாலகிருஷ்ணன்
கல்வி    எம்ஏ., எம்.பில்., எல்.எல்.பி.,
ெதாழில்    வக்கீல்
பிறந்த இடம்    குன்னூர்
பிறந்த தேதி    17.02.1962
வயது    57
தந்தை பெயர்    சின்னராஜ்
தாயார் ெபயர்    லோகம்மாள்
மனைவி    சுசீலா
குழந்தைகள்    இல்லை
முகவரி    69, முத்தாளம்மன் தெரு, ஓட்டுப்பட்டரை, குன்னூர், நீலகிரி மாவட்டம்.

மக்களவை செயல்பாடு:

வருகை பதிவேடு    78%
கேட்ட கேள்விகள்    696
பங்கேற்ற விவாதம்    48


2014ல் காட்டிய சொத்து கணக்கு
அசையும் சொத்து
கோபாலகிருஷ்ணன்    ₹20.24 லட்சம்
மனைவி சுசீலா    ₹14.16 லட்சம்

அசையா சொத்து
கோபாலகிருஷ்ணன்    ₹75.00 லட்சம்
மனைவி சுசீலா    இல்லை.

இப்போது    வானமே எல்லை.

கூடுதல் தகவல்:    நகராட்சி தலைவராக இருந்தபோது நன்றாக சம்பாதித்தேன். இப்போது, ஒன்றுமே கிடையாது என்பார்.

பேரவை தொகுதி
உதகமண்டலம்
கூடலூர்
குன்னூர்
மேட்டுப்பாளையம்
அவினாசி
பவானிசாகர்




வெளியே சோக்கு; உள்ளே சீக்கு...

விடிந்து நீண்ட நேரமாகியும், பனிமூட்டம் பார்வையை மறைத்தது. கண்ணில் படாமல் கதிரவன் மறைந்திருந்தது, அது, வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதிகளுக்கு  உதாரணமாக தெரிந்தது. ஊட்டி சாலையோர டீக்கடையில் தேயிலை நீர் ஆவி பறந்தது. அந்த காலை நேரத்திலும் ‘கிக்’ ஏறிய பாடல்...
‘‘போதை ஏறிப் போச்சு...
புத்தி மாறிப் போச்சு....
சுத்தம் பூமி எனக்கு
சொந்தமாகி போச்சு...’’

- டீயை பருகியபடி, அதை ரசித்தது நமது எம்பி தொகுதி அலசல் டீம். பாட்டுடன் ஓடிய கற்பனை, நீலகிரியில் சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மனதில் திரையிட்டது. மெலிதாக ஒரு சிரிப்பு. ‘டாஸ்க் நாட்டுல இதெல்லாம் சகஜமே...’ என ஒரு கமென்ட்.
அனல் கக்கிய டீ, உள்ளே போனதும் சுறுசுறுப்பு. தொகுதி வலம் தொடங்கியது.இயற்கை  அன்னையின் அவதரிப்பில், கண்களுக்கு விருந்து படைக்கும் இடம்தான் நீலகிரி மக்களவை தொகுதி. மேற்கு  தொடர்ச்சி மலையை மையமாக கொண்டது. ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானி சாகர் (தனி) ஆகியவை இதன் 6 பேரவை தொகுதிகள். இவை, 4 மாவட்டங்களில் வேர் போல் பரவியுள்ள ஆக்டோபஸ். ஊட்டி, குன்னூர், கூடலூர் - நீலகிரி மாவட்டம். மேட்டுப்பாளையம் - கோவை மாவட்டம். அவினாசி - திருப்பூர்  மாவட்டம். பவானிசாகர் - ஈரோடு மாவட்டம். அதாவது, மலைக்கு மேல் மூன்று; மலைக்கு கீழ் மூன்று. ஆக, தமிழகத்தின் மற்ற எம்பி.க்களுக்கு இல்லாத பெருமை, நீலகிரி எம்பி.க்கு உள்ளது. 4 மாவட்ட கலெக்டர், எஸ்பி.க்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வாய்ப்பு பெற்றவர் இவர் ஒருவரே. அவர்தான் எம்பி கோபாலகிருஷ்ணன். படித்தது வக்கீலுக்கு என்றாலும், முழு நேர தொழில் அரசியல்தான். அதிமுக.வில் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்து எம்பி.யாக உயர்ந்தவர். கொடநாடு எஸ்டேட்டுக்கு வரும்போது ஜெயலலிதாவின் பார்வையில் பட்ட அதிர்ஷ்டசாலி.நீலகிரி தொகுதி ஒரு அத்திப்பழம். பார்வைக்கு அழகே தவிர; உள்ளுக்குள் அத்தனையும் சொத்தை. தேயிலைக்கு உரிய விலையில்லை. குடிக்கவும், பாசனத்துக்கும் தண்ணீரில்லை. வேலைவாய்ப்புகள் இல்லை. சாலைகள், மேம்பாலங்கள், தொழிற்சாலைகள் இல்லை. இப்படி ‘இல்லாமை’ என்பது எல்லா இடத்திலும் தலை விரித்தாடுகிறது. இவற்றுக்கு தீர்வு காண வேண்டியவர் கோபாலகிருஷ்ணன். அவரோ தனக்கு அப்படிப்பட்ட பொறுப்பு எதுவும் இல்லாதது போலவே இருக்கிறார் என புலம்புகின்றனர் தொகுதி மக்கள். இவர், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு மிகப்பெரிதாக உள்ளது. அவ்வளவு ஏன்? தொகுதிக்குள் இவரை பார்ப்பதும் அரிதிலும் அரிதாம்.

நான் யாருன்னு தெரியுமில்ல... தொலைச்சிடுவேன் பாத்துக்க!
எப்போதுமே ஒருவித மிரட்டல் பாணியில் இருப்பதே கோபால கிருஷ்ணனின் வாடிக்கை. தேர்தல் நேரத்தில் ஊடகம் பக்கமே தலைகாட்ட மாட்டார். ‘சார்... ஒரு போட்டோ போடலாம். போஸ் கொடுங்க’ என்றால், ‘ஐய்யய்யோ...’ என்று ஓட்டம் பிடிப்பார். ஜெயலலிதா மீது அவ்வளவு பயம். சமீபத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி, தேசிய ஊடகங்கள், சமூக வலைதளங்களில் அதிகம் அடிபட்ட தமிழக எம்பி.க்களில் இவரும் ஒருவராகி விட்டார். தொகுதி பக்கமே செல்லாத நிலையில், மக்களிடம் மட்டுமின்றி, சொந்த கட்சியிலும் எதிர்ப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களை இவர் பகிரங்கமாக பொதுக்கூட்ட மேடையிலேயே மிரட்டிய சம்பவமும் நடந்தது. ‘எம்பி.யை காணவில்லை’ என தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு இவரது செயல்பாடு  உள்ளது. சமீபத்தில், குன்னூரில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் இருந்த காவலரை, ‘நான் யாருன்னு தெரியுமில்ல்ல... தொலைச்சிடுவேன் பா்த்துக்க...’ என இவர் மிரட்டிய வீடியோ, சமூக வளைதலங்களில் வைரலாக பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அவர் இருந்த நிலையே ‘வேற லெவல்’ என்கிறது போலீஸ் வட்டாரம்.

கைவிடும் சுற்றுலா
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி. அதனால்,  சுற்றுலா தொழிலும் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வருமானம். கோடை முடிந்து மழைக்காலம்  துவங்கினால், மலையில் இருந்து ஓடும் வெள்ளம் போல் சுற்றுலா தொழிலும் அடித்து சென்று விடும். பனியில் கருகும் பயிராக, மக்களும் வாடி விடுவார்கள்.

வயிற்றுக்கு வழி தேடி
தொகுதியின் பெருவாரியான மக்களின் பிரதான தொழில் விவசாயம். 50% பேருக்கு தேயிலை தொழில்தான் வாழ்வாதாரம். இங்கு, குறு, சிறு விவசாயிகள் அதிகம். அதற்கு இணையாக தனியார் தேயிலை  தோட்டங்களும் உள்ளன. இவற்றில்  பல ஆயிரம் தோட்டத் தொழிலாளர், விவசாய கூலித் தொழிலாளர் பணியாற்றுகின்றனர். மலை காய்கறி விவசாயமும் செய்யப்படுகிறது. நீலகிரி மலையில், தேயிலை தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிற்சாலை எதுவும்  கிடையாது. இதனால், போதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் தொகுதி மக்களில் 80  சதவீதம் பேர் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர்.

தெறிக்க விடும் தேயிலை
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், விவசாயிகள் பல  ஆண்டுகளாக தவிக்கின்றனர். உரிய விலை நிர்ணயம் செய்யும்படி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை. கேட்டது இதுவரை கிடைக்கவில்ைல. பிரச்னையை நன்கு அறிந்தும்  கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார் எம்பி.

வாடும் கொய்மலர்
பசுந்தேயிலை தொழில் பாதித்த நிலையில், கொய்மலர் தொழிலை மேற்கொள்ள அரசே அறிவுரை வழங்கியது. அதை வேதவாக்காக கருதி, பெரும்பாலான தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டனர். ஆனால், போதிய  ஏற்றுமதி வசதிகள், குளிர்பதன கிடங்கு இல்லாததால் இத்தொழிலும் நசிந்தது. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை வேலைவாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாக உள்ளது.

பெரியோர்களே,
தாய்மார்களே...

2014 தேர்தலில்
அளித்த வாக்குறுதிகளின் சுருக்கம்:
* தேயிலைக்கு  உரிய விலை

* செக்‌ஷன் 17  நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா
* அவினாசி-அத்திக்கடவு திட்டம்
* நீலகிரியில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி
* நீலகிரியில் ஹெலிகாப்டர் சேவை
* ரோப் கார் திட்டம்

கானல் நீராகும் தொழிற் கல்லூரி
மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி போன்றவை இல்லாத தொகுதிதான் நீலகிரி. தொழிற்சார்ந்த படிப்புகளுக்காக மாணவ, மாணவிகள் வெளிமாவட்டங்களுக்கே செல்ல  வேண்டிய நிலை உள்ளது. நீலகிரி தொகுதியில் பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள்  உள்ளனர். அவற்றை நிறைவேற்றக் கூடிய எண்ணம் இல்லாதவராகவே கோபால கிருஷ்ணன் இருக்கிறார்.

ஆலைக்கு ‘மாலை’
நீலகிரி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் எதுவும் கிடையாது. இருந்த ஒரே ஒரு எச்பிஎப் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது. கடந்த திமுக ஆட்சியில் இது மூடப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டன. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இதற்கு மூடுவிழா நடத்தி, மங்கலம் பாடி விட்டார்கள். இதை எதிர்க்கவோ, மீண்டும் அதற்கு உயிர் கொடுக்கவோ எம்பி ஆர்வம் காட்டவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

வடக்கே போகும் உருளைக்கிழங்கு
நீலகிரியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம்  உள்ளது. ஆனால், தற்போது இந்த ஆராய்ச்சி மையத்தை வட இந்தியா கொண்டு  செல்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.  தொகுதி எம்பி என்ற முறையில் இதை தடுக்க முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ஆடு-புலி ஆட்டமான அவினாசி-அத்திக்கடவு:

திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கோரிக்கையாக இருப்பது, அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம். கோவை மாவட்டம், பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2000 கன அடி வெள்ள உபரி நீரை, இந்த 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம், இது நிறைவேறினால் 40 லட்சம் மக்களின் குடிநீர் பிரச்னை தீரும். 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளம், 971 குட்டைகளில் நீர் நிரப்பப்படும். மேற்கு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். 1957ல் தொடங்கிய இத்திட்டம், இன்றும் நிறைவேறாமல் இருக்கிறது. இதனால், இந்த பகுதிகளில் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் 1900 அடிக்கும் கீழ் சென்று விட்டது. இதனால், விவசாயம் பொய்த்தது., குடிநீருக்கும் திண்டாட்டம். தற்போது. இத்திட்டத்தை சில மாற்றங்களுடன் நிறைவேற்ற, ₹1,652 கோடி பணிகளுக்கு தமிழக அரசு கடந்த 28.11.2018 அன்று டெண்டர் கோரியது. டெண்டர் எடுக்க கடைசி நாள் 23.01.2019. 34 மாதத்தில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தை நிறைவேற்ற முதலில், மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே துறைகளிடம் அனுமதி பெற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த அனுமதி கிடைத்ததா என்பது விளக்கப்படவும் இல்லை. இதற்கு இத்தொகுதி எம்.பி. எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் இந்த ஆடு, புலி ஆட்டம் மக்களை குழப்பியுள்ளது.

கிடப்பில் கிடக்கும் 3வது மாற்றுப்பாதை
மழைக் காலங்களில் இயற்கை பேரிடர் ஏற்படும்போது குன்னூர் -  மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகள் பாதிக்கப்படும். இதுபோன்ற நேரங்களில் மாற்றுப்பாதை வேண்டும் என்பதற்காக  ஊட்டியில் இருந்து மஞ்சூர், முள்ளி, காரமடை வழியாக மூன்றாவது மாற்றுப்பாதை  அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கிறது.

சொந்த ஊர்லயே மரியாதை இல்ல:

தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது. எம்பி.யின் சொந்த ஊரான குன்னூரிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காண, எமரால்டு கூட்டு குடிநீர்  திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குன்னூரில் கடந்த முறை  திமுக எம்எல்ஏவாக இருந்த ராமச்சந்திரனால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை விரைவாக முடித்து தண்ணீரை தனது ஊருக்கு கொண்டு செல்ல  நடவடிக்கை எடுக்காமல் மந்தமாக இருப்பதால், சொந்த ஊரிலேயே எம்பிக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

செக்‌ஷன் 17 பட்டா;

தொகுதிக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ‘செக்‌ஷன்  17’ நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது.  தனியார் வனப்பாதுகாப்பு சட்டம், யானைகள் வழித்தடம், புலிகள் காப்பக  விரிவாக்க திட்டம் போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்த எம்பி, இப்போது அதை பற்றி கேட்டாலும் காதில் போட்டுக் கொள்வது கிடையாது.

நாசமான நெசவு:

அவிநாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம்  பகுதிகளில் விவசாயம், நெசவு முக்கிய தொழிலாக உள்ளது. போதிய நீர்ப்பாசன வசதி  இல்லாததால் இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  சாயப்பட்டறைக் கழிவுகளாலும் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. பல  சாயப்பட்டறைகள் மூடப்பட்ட நிலையில், நெசவு தொழிலும் முடங்கியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gopalakrishnan ,Nilgiri , MP Gopalakrishnan, Nilgiri, Property account
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...