×

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.தமிழகத்தில் 2015ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் 98 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, ₹2 லட்சத்து 42 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஜனவரி 23 மற்றும் 24ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து. அதற்கான ஆயத்த பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது. அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். இதை ஏற்று, பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் தமிழகம் வருவதாக உறுதி அளித்துள்ளனர்.

தமிழக அரசு அறிவித்தபடி, நாளை (23ம் தேதி) காலை 10 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை கொள்கை 2019ஐ மத்திய பாதுகாப்பு துைற அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய, பழைய தயாரிப்புகள் குறித்து பார்வைக்கு வைக்க உள்ளன. நாளை தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது. மதியம் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது.

இதை தொடந்து 2வது நாள் மாநாடு நாளை மறுதினம் (24ம் தேதி) காலை 10 மணிக்கு சிறு,குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

24ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World Investors Conference ,Chief Minister ,Chennai Nandambakkam Business Center , World Investors Conference, Nandambakkam Business Center, Edappadi Palinasamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...