×

விடுதியில் சக எம்எல்ஏ ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்திய கர்நாடகா காங். எம்எல்ஏ கணேஷ் திடீர் சஸ்பென்ட்

பெங்களூரு: முன்னாள்  அமைச்சரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்திய  மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ கணேஷை காங்கிரஸ் கட்சி சஸ்பென்ட் செய்துள்ளது. கர்நாடகாவின் ராம்நகரம் மாவட்டம்,  பிடதியில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் கடந்த நான்கு நாட்களாக காங்கிரஸ்  எம்எல்ஏக்கள் தங்கி மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் மக்களவை தேர்தல்  தொடர்பாக ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள்  சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது பல்லாரி மாவட்டத்தில் உள்ள விஜயநகர் தொகுதி  எம்எல்ஏ ஆனந்த் சிங்கை, கம்ப்ளி தொகுதி எம்எல்ஏ ஜெ.என்.கணேஷ் தாக்கினார்.  இதில் காயமடைந்துள்ள ஆனந்த்சிங், தற்போது பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில்  ஆனந்த்சிங் மீது தாக்குதல் நடத்திய கணேஷ் மீது பிடதி போலீஸ் நிலையத்தில்  இந்திய தண்டனை சட்டம் 323, 324, 307, 506 ஆகிய பிரிவுகள் கீழ் எப்.ஐ.ஆர்.  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரிசார்ட்டில் தேவையில்லாமல்  தகராறு செய்ததுடன் சொந்த கட்சி எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தியதின் மூலம்  கட்சி விதிமுறைகளை மீறியுள்ளதாக ஜெ.என்.கணேஷை கட்சியில் இருந்து சஸ்பென்ட்  செய்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் நடவடிக்கை  எடுத்துள்ளார்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த துணை முதல்வர்  பரமேஸ்வர் தலைமையில் குழு அமைத்துள்ள தினேஷ்குண்டுராவ், குழுவில்  அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ் மற்றும் கிருஷ்ண பைரேகவுடா ஆகியோரை உறுப்பினராக  சேர்த்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karnataka Cong ,MLA ,hotel ,Anand Singh ,MLA Ganesh , Anand Singh, Karnataka, Kang. MLA Ganesh, Suspend
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...