×

சாமி சிலை, திருஷ்டி பொம்மைகள் செய்யும் ராஜஸ்தான் தொழிலாளர்கள் : பிழைப்புக்காக குடும்பத்துடன் இடம் பெயர்வு

சேலம்: தமிழகம் முழுவதும் சாலையோரங்களில் குடில் அமைத்து சாமி சிலை, திருஷ்டி பொம்மைகளை செய்து ராஜஸ்தான் தொழிலாளர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூரில் போதிய வருவாய் கிடைக்காததால், நாடு முழுவதும் பரவிக்கிடப்பதாக தெரிவிக்கின்றனர். கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற தமிழகத்தில் தற்போது, பொம்மைகள், சாமி சிலைகள் செய்வதில் வெளி மாநில தொழிலாளர்களே அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் குடிசை தொழிலாக பொம்மைகள் செய்வது  இருந்து வந்தது. அதிலும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு நிகர் வேறு எந்த பொம்மையும் இல்லை. அந்த அளவிற்கு மதிநுட்பத்துடன், கைவண்ணத்தை காட்டி நம் தமிழக கைவினைஞர்கள் பொம்மைகள் செய்வார்கள். ஆனால் தற்போது, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ஒருபுறம் செய்து வந்தாலும், இதர சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகள் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

இந்த சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகள் செய்வதில் அதிக ஆர்வத்துடன் கைவண்ணத்தை வெளிபடுத்தி வருவது ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள். இவர்கள், நாடு முழுவதும் பைபாஸ் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரமாக குடில் அமைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, நெல்லை என பரவலாக ஆங்காங்கே சாலையோரங்களில் குடில்கள் அமைத்து சாமி சிலைகள், பொம்மைகளை செய்து விற்பனை செய்கின்றனர். சேலத்தில், கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை, சங்ககிரி சாலை, இரும்பாலை சாலை போன்ற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் குடில் அமைத்து குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இவர்கள், முருகன், விநாயகர், சிவன், ராமன், கிருஷ்ணன், சாய்பாபா, ஐயப்பன், அம்மன் உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், திருஷ்டி பொம்மைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் போன்றவற்றை வெள்ளை சிமெண்ட், தேங்காய் நார், சுண்ணாம்பு பவுடர் போன்றவற்றின் மூலம் செய்கின்றனர்.

சாலையோரத்தில் சாமி சிலைகள், திருஷ்டி பொம்மைகளை அழகுபட அடுக்கி வைத்து வியாபாரத்தில் ஈடுபடும் இவர்கள், தள்ளுவண்டிகளில் கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதியில் பொம்மைகள் செய்து விற்பனையில் ஈடுபட்டு வரும் ராஜஸ்தானை சேர்ந்த பலராமன் (38) கூறுகையில், ‘‘எங்கள் மாநிலத்தில் போதிய வருவாய் கிடைக்கும் அளவிற்கு தொழில் ஏதும் இல்லை. கட்டுமான வேலைக்கு சென்றால் 300ம், விவசாய கூலி வேலைக்கு சென்றால் 200ம் கிடைக்கும். அதுவும் எப்போதும் வேலை இருக்காது.

இதனால், பொம்மைகள் செய்யும் தொழிலை கற்றுக்கொண்டு பிழைப்பிற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகராஷ்டிரா, மேற்கு வங்கம் என நாடு முழுவதும் பரவலாக தொழில் செய்து வருகிறோம். இங்கு நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். வாடகை நிலத்தில் குடில் அமைத்து பொம்மைகளை செய்கிறோம். சாமி சிலைகளை 50 முதல் 1000 வரையில் அளவை பொருத்து விற்கிறோம். திருஷ்டி பொம்மைகள் 100 முதல் 600 வரையில் விற்பனை செய்கிறோம். சாலையோரம் பொம்மைகளை அடுக்கி வைத்திருப்பதால் பலரும் வந்து வாங்கிச் செல்கின்றனர். குடும்பத்துடன் தங்கியிருந்து தொழில் செய்வதால், பிள்ளைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறோம். மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதால், எங்களது கைவண்ணத்தை பொம்மைகளில் காட்டுகிறோம்,’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajasthani Workers , Toys, Rajasthan, workers
× RELATED கோடை காலத்தையொட்டி மோர் விற்பனை 25% அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்