×

அறிவியல் கண்டுபிடிப்பில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மாணவி வெளிநாடு பயணம் : சுவீடன், பின்லாந்துக்கு கல்வி சுற்றுலா

நாகர்கோவில்: நாகர்கோவில் எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி என்.என். உமா. இவர் உட்புற காற்று மாசுபாட்டால் உண்டாகும் பாதிப்பை தடுக்கும் வகையில், வீடுகளில் செடிகள் வளர்ப்பதன் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து கண்டறிந்தார். இதற்காக இன்ஸ்பயர் விருது மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் தங்கப்பதக்கம் உள்பட பல்வேறு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். அறிவியல் கண்டுபிடிப்பில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி கல்வித்துறை தேர்வு செய்து அவர்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு  அழைத்து செல்கிறது.
 அந்த வகையில் தமிழகம் முழுவதும் இருந்து 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் எஸ்.எம்.ஆர்.வி. பள்ளி மாணவி உமாவும் ஒருவர் ஆவார். அவர்  சென்னை புறப்பட்டு சென்றார். சுவீடன், பின்லாந்து செல்லும் இவர்கள் அங்குள்ள கல்விமுறைகள் பற்றி ஆய்வு செய்து பார்வையிடுகிறார்கள். 30ம் தேதி இவர்கள் இந்தியா திரும்புகிறார்கள். வெளிநாடு கல்வி சுற்றுலா செல்வதை தொடர்ந்து மாணவி உமா,  கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரேவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த கலெக்டர், மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இந்த சந்திப்பின் போது பள்ளி தலைமை ஆசிரியை நாகேஸ்வரி, பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மாணவி உமா கூறுகையில், 7ம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் விலங்கியல் ஆசிரியை கமலம் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக உட்புற காற்று மாசுபாடு பற்றியும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கண்டறிந்தேன். வீடுகளில் பல்வேறு வகையிலான செடிகளை வளர்ப்பதன் மூலம் உட்புற காற்று மாசுபாட்டை தடுக்க முடியும் என்பதை கண்டறிந்தேன். இதன் மூலம் தற்போது வெளிநாடு செல்ல முடிகிறது. எனது கண்டுபிடிப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியை கமலம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை நாகேஸ்வரி உள்ளிட்டோருக்கும், எனது தாயாருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : School Student Traveling Away ,Finland Travel Education ,Sweden , Student, travel, educational tourism
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்